search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிமுக-திமுக
    X
    அதிமுக-திமுக

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தி.மு.க., அ.தி.மு.க. தீவிரம்

    தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகளுக்கு எதிராக பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் தனித்து போட்டியிட்டு குறிப்பிட்ட இடங்களையாவது பிடிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளன.
    சென்னை:

    தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி உள்ளன.

    ஆளும்கட்சியான தி.மு.க. ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது போல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற வேண்டுமென முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ள அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற கட்சியினர் உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றியால் தி.மு.க.வினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். தி.மு.க. தற்போது ஆளும் கட்சியாக இருப்பதால் மக்களின் நம்பிக்கையை பெற்று நிச்சயம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற்றுவிடலாம் என்பதே அக்கட்சியினரின் கணக்காக உள்ளது.

    இதனை தொடர்ந்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் எப்படியாவது நகர்ப்புற தேர்தலில் போட்டியிட ‘சீட்’ வாங்கிவிட வேண்டும் என்பதில் மும்முரமாக உள்ளனர்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபடுமாறு தி.மு.க. தலைமை, மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதனைத் தொடர்ந்து தங்கள் பகுதியில் யார், யாருக்கு சீட் கொடுக்கலாம் என்பது பற்றிய பட்டியலும் அவர்களிடம் கேட்கப்பட்டுள்ளது.

    அதில் புது முகங்கள் பலரையும் மாவட்ட செயலாளர்கள் அடையாளம் கண்டு வைத்துள்ளனர். அதே நேரத்தில் ஏற்கனவே வெற்றி பெற்று குறிப்பிட்ட வார்டுகளில் செல்வாக்குடன் உள்ளவர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இப்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சீட் வாங்குவதற்கு தி.மு.க.வில் கடும் போட்டி நிலவி வருகிறது.

    சட்டசபை தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ள அ.தி.மு.க. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளது. இதற்காக அ.தி.மு.க. தலைமை, தி.மு.க. அரசுக்கு எதிரான வி‌ஷயங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாகவே தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறி போராட்ட அறிவிப்பையும் அந்த கட்சி வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக சில நாட்களுக்கு முன்பு நடை பெற்ற அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற கட்சியினர் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.விலும் தி.மு.க.வை போன்றே மாவட்ட செயலாளர்களிடம் வேட்பாளர்கள் தொடர்பான பட்டியலை கட்சி தலைமை கேட்டுள்ளது. இதன்படி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களும் தங்கள் பகுதியில் செல்வாக்கு மிகுந்த நபர்களை அடையாளம் கண்டு பட்டியல் தயாரித்துள்ளனர்.

    இதுபோன்ற பட்டியலை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வில் மாவட்ட செயலாளர்கள் கட்சி தலைமையிடம் வழங்க உள்ளனர்.

    அதற்கு முன்னதாக தங்களது பெயரும் வேட்பாளர் தேர்வு பட்டியலில் இடம் பெற்று விட வேண்டும் என 2 கட்சிகளை சேர்ந்த முன்னணி நிர்வாகிகளும் வரிந்து கட்டிக் கொண்டு சிபாரிசுகளுடன் களம் இறங்கி இருக்கிறார்கள்.

    இதற்காக தங்களது பகுதிகளில் பலர் இப்போதே சீட் கிடைக்கும் முன்பே ஆதரவு திரட்ட தொடங்கி இருக்கிறார்கள். எனக்கு தான் நிச்சயம் சீட் கிடைக்கும் கண்டிப்பாக ஆதரவு தர வேண்டும் என்று ரகசிய வாக்கு சேகரிப்பிலும் 2 கட்சிகளை சேர்ந்தவர்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஒரு சில வார்டுகளில் இதற்கு முன்பு வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கக் கூடாது என்றும், புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் 2 கட்சி நிர்வாகிகள் சார்பிலும் மாவட்ட செயலாளர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    அதேநேரத்தில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் தங்களுக்கு சாதகமான இடங்களை கேட்டு பெற்று நகர்ப்புற தேர்தலில் களம் இறங்க முடிவு செய்துள்ளன.

    பாஜக


    அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜனதாவும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்த முறை எப்படியும் வெற்றி பெற வேண்டும் என காய் நகர்த்தி வருகிறது.

    தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகளுக்கு எதிராக பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் தனித்து போட்டியிட்டு குறிப்பிட்ட இடங்களையாவது பிடிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளன. இதன் மூலம் நகர்ப்புற தேர்தல்களம் முன்கூட்டியே சூடுபிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


    Next Story
    ×