search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    குமரியில் ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா

    குமரி மாவட்டம் முழுவதும் இதுவரை 11 லட்சத்து 50 ஆயிரத்து 495 பேர் முதல் தடுப்பூசியும் 7 லட்சத்து 16 ஆயிரத்து 800 பேர் இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தது. சமீப காலமாக கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்க எண்ணில் இருந்து வந்தது.

    இந்த நிலையில் பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. திருமண வீடுகள் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதையடுத்து பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாகர்கோவில் மாநகரில் தினமும் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.

    நேற்று நடத்தப்பட்ட சோதனையில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வடசேரி, நேசமணி நகர், கே.பி. ரோடு பகுதிகளில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டு ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    மாவட்டத்தில் மற்ற இடங்களிலும் கொரோனா வேகமாக பரவ தொடங்கியுள்ளது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் ஒருவரும் கிள்ளியூரில் 2 பேரும், குருந்தன் கோட்டில் 3 பேரும், மேல்புறத்தில் ஒருவரும், முன்சிறையில் 6 பேரும், ராஜாக்கமங்கலத்தில் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கேரளாவிலிருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்றைய பாதிப்பு 25 ஆக அதிகரித்துள்ளது. இதில் 9 ஆண்கள் 14 பேர் பெண்கள் ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரி மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்து 252 ஆக உயர்ந்துள்ளது.

    இதில் 58 ஆயிரத்து 105 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் களப் பணியாளர்கள் மூலமாக காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்படுகிறது. மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் சோதனை தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

    கேரள எல்லைப்பகுதியில் உள்ள களியக்காவிளை, சூழால், காக்கவிளை, நெட்டா சோதனைச் சாவடியில் கேரளாவில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டம் முழுவதும் 13 லட்சத்து 45 ஆயிரத்து 778 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிப்பு ஒருபுறமிருக்க அதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    ஆனால் பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே இதை கட்டுப்படுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடைவீதிகள் பொது இடத்திற்கு செல்லும் போது பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் அரவிந்து தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் பெரும்பாலான பகுதிகளில் சுற்றித்திரியும் மக்கள் முக கவசம் அணியாமல் சுற்றி திரிவது வேதனை அளிக்கிறது.

    மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்படுகிறது. சில கிராமங்களில் வீடு வீடாகச் சென்று தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் இதுவரை 11 லட்சத்து 50 ஆயிரத்து 495 பேர் முதல் தடுப்பூசியும் 7 லட்சத்து 16 ஆயிரத்து 800 பேர் இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் தற்போது 2 லட்சத்து 38 ஆயிரத்து 140 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 75,700 டோஸ் கோவாக்சகன் தடுப்பூசிகளும் இருப்பில் உள்ளது.
    Next Story
    ×