search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேல்முருகன்
    X
    வேல்முருகன்

    அரசு போக்குவரத்து கழகம் சீரமைப்பு, ஊழியர்களின் ஊதிய உயர்வு: உடனடி பேச்சுவார்த்தை நடத்த அரசுக்கு வேல்முருகன் கோரிக்கை

    அரசு போக்குவரத்து கழகத்தை சீரமைக்கவும், ஊழியர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்தவும் தமிழ்நாடு அரசு முன் வரவேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
    தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.-வுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அந்த ஒப்பந்தங்கள் முடிந்த 2 ஆண்டுகள் முடிந்த நிலையில், புதிய ஒப்பந்தத்திற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அ.தி.மு.க. அரசு சென்று விட்டது. இது தொழிற்சங்கங்கள் மத்தியில் பெரும் கோபத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியிருந்தது.

    தொழிற்சங்கங்கள் சொல்ல முடியாத துயரத்தில் இருந்து வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

    அரசு போக்குவரத்து கழகத்தை சிறப்பாக நடத்துவோம் என்று கூறியுள்ள தமிழ்நாடு அரசு, அதற்கான முன்னெடுப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும். சமீபத்தில், அரசு தரப்பில் அமைக்கப்பட்ட குழு, தனது ஆய்வறிக்கையில் பல ஆலோசனைகளை வழங்கியிருந்தது. அந்த ஆலோசனைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

    இது ஒருபுறமிருக்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் இயங்கி கொண்டிருக்கும் பெரும்பாலான பேருந்துகள், பழைய பேருந்துகளாகும். இப்பேருந்துகளை ஓட்டுனர்கள் சிரமப்பட்டு  இயக்கி வருகின்றனர். இதன் காரணமாக, விபத்துக்கள் அதிகரிப்பதோடு, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டக்கூடிய அபாயம் உள்ளது. அதனால், காலாவதியான பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகளை வாங்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்.

    பேருந்துகளை பராமரிப்பதற்கான போதிய ஊழியர்களை நியமிப்பதோடு, தேவைக்கு ஏற்ப உதிரிப் பாகங்களை கொள்முதல் செய்ய வேண்டும். மேலும், போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய பிரச்சனைகளான காப்பீட்டுத்தொகை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பல்வேறு வகைகளில்  பிடித்தம் செய்யப்பட்ட 10 ஆயிரம் கோடி ரூபாய் அரசிடம் உள்ளது. இத்தொகையை தொழிலாளர்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுப்பதோடு, நிலுவையில் உள்ள பேட்டா தொகையான 27 கோடி ரூபாயையும் வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×