search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சாய ஆலைகள் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை - அதிகாரிகள் எச்சரிக்கை

    நொய்யல் கரையோரம் அமைத்த மண் பாதை பராமரிப்பின்றி புதர்மண்டி காணப்படுகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் நகரப்பகுதியில் நீர் நிலைகளின் மிக அருகே சாய, சலவை ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்தநிலையில் மழை காலங்களில் கழிவுநீரை சுத்திகரிக்காமல் திறந்துவிடுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.

    சுத்திகரிப்புக்கு அதிக செலவு ஏற்படுவதால் மழை பெய்யும் நேரத்தில் தண்ணீரை திறந்துவிடுவதாக பலரும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் மணியகாரம்பாளையத்தில் இருந்து காசிபாளையம் செல்லும் ரோட்டில்  சாயக்கழிவு வெளியேற்றப்படுவதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து  அப்பகுதியினர் கூறியதாவது:

    நொய்யல் கரையோரம் அமைத்த மண் பாதை பராமரிப்பின்றி புதர்மண்டி காணப்படுகிறது. சரியான போக்குவரத்தும் இல்லாததால் அடிக்கடி சாயக்கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. சாயக்கழிவு நீர் மண் தடத்தில் தேங்கி நின்று நொய்யலுக்குள் கலந்துவிடுவதால் வெளியே தெரிவதில்லை.

    மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளிடம் புகார் கூறியும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே நொய்யல் கரையோரம் கழிவுநீரை வெளியேற்றுவதால் வருவாய்த்துறை ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

    இந்தநிலையில் மாசுகட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் (சரவணகுமார்), உதவி பொறியாளர் பாரதிராஜா மற்றும் அதிகாரிகள் குழுவினர் காசிபாளையத்தில் ஆய்வு நடத்தினர். காசிபாளையம் ரோட்டில் தேங்கியுள்ள கழிவு நீர் மாதிரிகளை சேகரித்தனர். அப்பகுதியில் நொய்யலாற்று நீரின் டி.டி.எஸ்., அளவுகளை பரிசோதித்தனர்.

    இதுகுறித்து மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

    மணியகாரம்பாளையம் - காசிபாளையம் ரோட்டில் தேங்கியுள்ள கழிவுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பகுப்பாய்வுக்காக மாசுகட்டுப்பாடு வாரிய ஆய்வகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    ஆற்றோர சாய ஆலைகள் பொது சுத்திகரிப்பு மையங்களில் தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சாயக்கழிவு திறந்ததற்கான தடயங்கள் ஏதுமில்லை. தொடர்ந்து ஆய்வு நடத்தப்படும்.  விதிமீறல்கள் நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×