search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிவாரணம் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
    X
    நிவாரணம் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

    கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

    அண்டை மாநிலங்களில் பரவி வரும் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் நோயை கட்டுப்படுத்தவும் தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
    சென்னை:

    கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு மாநில அரசுகள் ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்’ என்று மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    மேலும் கொரோனாவால் உயிரிழப்பு நேரிடும்போது அந்த குடும்பத்துக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரண உதவி குறித்த வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.

    அதன்படி ஒரு குடும்பத்தில் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணம் அடைந்தால் அது கொரோனாவால் ஏற்பட்ட மரணம் என்பதை உறுதி செய்ததை தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவியை வழங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

    இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்க தொடங்கின.

    கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரை 27 லட்சத்து 31 ஆயிரத்து 945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 26 லட்சத்து 87 ஆயிரத்து 414 பேர் குணம் அடைந்துள்ளனர். 36 ஆயிரத்து 549 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு துறைகளுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    நடப்பு நிதியாண்டில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக இதுவரை மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழக அரசால் ரூ.8,398.18 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தொடர்ந்து ஆய்வு கூட்டம் நடத்தி அறிவுரைகளை வழங்கினார். இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக கடந்த மே மாதம் 21-ந்தேதி 36,184 ஆக இருந்த நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 710 ஆக குறைந்துள்ளது.

    தடுப்பூசி போடும் பணி

    கொரோனா 2-வது அலை மற்றும் 3-வது அலையை கட்டுப்படுத்த பெருமளவில் தடுப்பூசி முகாம்களை நடத்தி தமிழகத்தில் சுமார் 7 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதனால் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    தற்போது அண்டை மாநிலங்களில் பரவி வரும் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் நோயை கட்டுப்படுத்தவும் தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    பணியில் இருந்தபோது கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களது குடும்பங்களின் துயர் துடைக்கும் வகையில் கொரோனா நோய் தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.182.74 கோடி நிவாரணத்தொகை வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

    இனிவரும் காலங்களில் கொரோனா உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட உள்ளது.

    கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்துள்ள நபர்களின் குடும்பத்தினர் கொரோனா நோய் தொற்றினால் இறந்ததற்கான இறப்பு சான்றிதழ் வைத்திருந்தால் https://www.tn.gov.in இணைய வழியாகவும், அருகில் இருக்கும் இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி வரும் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து நிவாரணம் வழங்க அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    கொரோனா நிவாரணம் கோரி வரும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதி உள்ளவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

    இன்று சென்னை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகையை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். 
    Next Story
    ×