search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    மோடியை எதிர்த்து போராட்டம் நடத்த அ.தி.மு.க.வினர் தயங்குவது ஏன்? கே.எஸ்.அழகிரி கேள்வி

    தமிழகத்தைப் பொறுத்த வரை மு.க.ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகம் வெளிப்படையாக செயல்படுகிறது என கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.

    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 75-வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி சத்திய மூர்த்தி பவனில் தென்சன்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரஞ்சன் குமார் ஏற்பாட்டில் பிரமாண்டமான ராட்சத பலூனை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பறக்கவிட்டார்.

    காங்கிரஸ் கட்சிக்காக தியாகம் செய்து கட்சியை வழி நடத்திக்கொண்டிருப்பவர் சோனியா. அவரது பிறந்தநாளை எழுச்சியுடன் கொண்டாட காங்கிரஸ் சார்பில் தொண்டர்கள் மிகச் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளார்கள். தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவை காப்பாற்ற காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். காங்கிரஸ் அல்லாத கூட்டணியால் பா. ஜனதாவைவீழ்த்த முடியாது. இதை சிவசேனா கூட தெளிவுபடுத்தி இருக்கிறது.

    அந்த வகையில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் திமுக கூட்டணி மோடிக்கு எதிரான வலுவான கூட்டணியாக இருக்கும். நாளைய தினம் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க தமிழக அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாக அ. திமுக அறிவித்துள்ளது. அவர்கள் போராட்டம் நடத்த வேண்டியது மத்தியில் ஆளும் மோடியை எதிர்த்து தான் இருக்க வேண்டும் .

    பிரதமர் மோடி

    மன்மோகன் சிங் ஆட்சியின் போது வரியை குறைத்து பெட்ரோல் விலைய உயராமல் பார்த்துக் கொண்டார். ஆனால் மோடி இருபத்தி மூன்று லட்சம் கோடி வரியாக மட்டும் வசூலித்து உள்ளார். ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி உண்மையை உணர்ந்து இதற்கு காரணமான மோடியை எதிர்த்து போராட்டம் நடத்தி இருக்க வேண்டும் .அவ்வாறு நடத்த தயங்குவது ஏன் ?

    தமிழகத்தைப் பொறுத்த வரை மு.க.ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகம் வெளிப்படையாக செயல்படுகிறது. மழை வெள்ளத்தின் போது அவரது செயல்பாட்டின் மூலம் ஒட்டுமொத்த நிர்வாக இயந்திரமும் களத்தில் இறங்கி பணியாற்றியதை அறிந்தோம் சில குறைபாடுகள் இருக்கலாம். அதையும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் நிச்சயம் சரி செய்வார்.

    ரஜினியை சசிகலா சந்தித்ததில் ஆச்சரியமும் இல்லை. அதில் எந்த அரசியலும் இருக்கவும் வாய்ப்பில்லை. ஏனெனில் ரஜினி வெளிப்படையானவர். தனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி வெளிப்படையாகவே அறிவித்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் பொன்.கிருஷ்ண மூர்த்தி, தாமோதரன், பொதுச்செயலாளர்கள் காண்டீபன், அகரம் கோபி, முனீஸ்வரர் கணேசன் மாவட்ட தலைவர் முத்தழகன் மற்றும் கொட்டிவாக்கம் முருகன், தளபதி பாஸ்கர், ஜோதி பொன்னம்பலம், மலர்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதையும் படியுங்கள்...மின்சார சட்ட திருத்த மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்

    Next Story
    ×