search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அமராவதி, திருமூர்த்தி, உப்பாறு நிரம்பி வழியும் அணைகளால் விவசாயிகள் மகிழ்ச்சி - கூடுதல் தண்ணீர் தேக்க தூர்வார கோரிக்கை

    வட கிழக்கு பருவ மழை தொடங்கி அணை நீர்ப்பிடிப்புகளில் பெய்த கன மழையால் கடந்த நவம்பர் 3-ந்தேதி அணை நிரம்பியது.
    உடுமலை:

    உடுமலை பகுதியில் நடப்பு வடகிழக்கு பருவமழை சீசனில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சிமலை மற்றும் சமவெளிப்பகுதிகளிலும் கடந்த ஒரு மாதமாக கன மழை பெய்தது.

    வடகிழக்கு பருவமழையால் பி.ஏ.பி., பாசன தொகுப்பு அணைகளும், அமராவதி அணை மற்றும் உப்பாறு அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில், வரலாற்று நிகழ்வாக உடுமலை பகுதியிலுள்ள அமராவதி, திருமூர்த்தி மற்றும் உப்பாறு அணைகள் ஒரே சமயத்தில் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

    அமராவதி அணை ஜூன் முதல் மே வரையிலான நடப்பு நீர் ஆண்டில் தென்மேற்கு பருவமழையால், ஜூலை 23-ந்தேதி நிரம்பியது. தொடர்ந்து 3 மாதம் உபரிநீர் வெளியேற்றப்பட்ட நிலையில் திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டிலுள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்களில் பயிர் சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டது. இருப்பினும் அணை நீர்மட்டம் 85 அடிக்கு மேல் காணப்பட்டது.

    இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை தொடங்கி அணை நீர்ப்பிடிப்புகளில் பெய்த கன மழையால் கடந்த நவம்பர் 3-ந்தேதி அணை நிரம்பியது. கடந்த ஒரு மாதமாக அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பி.ஏ.பி., பாசன தொகுப்பு அணைகளில் ஒன்றான திருமூர்த்தி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. பி.ஏ.பி., 4ம் மண்டல பாசன நிலங்கள் மற்றும் உப்பாறு அணை, வட்டமலைக்கரை ஓடை அணை மற்றும் குளங்களுக்கு நீர் வழங்கப்பட்ட நிலையிலும் நீர்வரத்தும், வெளியேற்றமும் சீராக இருந்ததால், கடந்த ஒரு மாதமாக அணையில் நீர்மட்டம் ததும்பிய நிலையில் இருந்தது.

    திருமூர்த்தி அணை கடந்த 1997-ம் ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அதற்கு பின் 24 ஆண்டுகளுக்குப்பிறகு, கடந்த 1-ந்தேதி அணை நிரம்பியது. 5 மதகுகள் வழியாக நீர் திறக்கப்பட்டது. உடுமலை பகுதியில் மேற்கு நோக்கி பாயும் பாலாற்றில் இரு கரைகளையும் தொட்டு பல ஆண்டுகளுக்கு பின் தண்ணீர் பாய்ந்தோடுகிறது.

    உடுமலை அருகே கெத்தல்ரேவ் பகுதியில் உப்பாறு அணை அமைந்துள்ளது. போதிய நீர்பிடிப்பு பகுதிகள் இல்லாததால் பி.ஏ.பி., பாசன கசிவு நீர் மற்றும் மழை நீர் ஓடைகள் வாயிலாகவே அணைக்கு குறைந்த நீர் வரத்து கிடைக்கும்.

    இந்தநிலையில் நடப்பு மழை சீசனில் 16 ஆண்டுகளுக்கு பின் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 3 அணைகளும் நிரம்பி ததும்பி வழிவது விவசாயிகள் மத்தியில்  மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் திருமூர்த்தி அணை கோடைகாலத்தில் தூர்வாரப்பட்டு இருந்தால் உபரிநீரை திறக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:

    மழைப்பொழிவு ஏற்பட்டு திருமூர்த்தி அணை நிரம்பியது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் அணை முழுமையாக தூர்வாரப்படாத காரணத்தால் அதில் சுமார் 20 சதவீதம் மண் தேங்கி உள்ளது. 

    இதனால் நீர்தேக்க பரப்பளவும் படிப்படியாக குறைந்து வருகிறது. அணையை தூர்வாரக்கோரி விவசாயிகள் விடுத்த கோரிக்கையின் பேரில் கடந்த 2017 மற்றும் 2019-ம் ஆண்டில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    ஆனால் பருவ மழை குறுக்கிட்டதால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. அணையின் கிழக்குப்பகுதியில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை கோடைகாலத்தில் முழுமையாக தூர்வாரி அப்புறப்படுத்தினால் கூடுதலாக தண்ணீரை சேமிக்க இயலும். அத்துடன் உபரிநீரை திறக்க வேண்டிய அவசியமும் இருக்காது. எனவே இனிவரும் காலங்களில் அணையை முழுமையாக தூர்வாரி நீர்தேக்க பரப்பளவை அதிகரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    Next Story
    ×