search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரேமலதா விஜயகாந்த்
    X
    பிரேமலதா விஜயகாந்த்

    கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச முடிவு: பிரேமலதா தே.மு.தி.க. செயல் தலைவர் ஆகிறார்

    விஜயகாந்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து கட்சி தொடர்பான பெரும்பாலான கூட்டங்களை விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதாவே முன்னின்று நடத்தி வருகிறார்.
    சென்னை:

    தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்த விஜயகாந்த்கடந்த 2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கினார்.

    கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் அரசியலில் கோலோச்சிக் கொண்டு இருந்த நேரத்திலேயே விஜயகாந்த் தனித்தன்மையுடன் செயல்பட்டார்.

    கட்சி தொடங்கிய அடுத்த ஆண்டே நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்திய விஜயகாந்த் சுமார் 30 சதவீத வாக்குகளை பெற்றார். விருத்தாச்சலத்தில் போட்டியிட்ட விஜயகாந்த் வெற்றி பெற்று முதல்முறையாக எம்.எல்.ஏ.ஆனார்.

    இதனை தொடர்ந்து 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைக்க தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் விரும்பின. ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்த
    விஜயகாந்த்
    , வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார்.

    ஆனால் அடுத்தடுத்த தேர்தல்களில் விஜயகாந்தின் முடிவுகள் அவருக்கு கைகொடுக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக தே.மு.தி.க. தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த காலகட்டங்களில் 2 சட்டமன்ற தேர்தல்களிலும் மக்கள் செல்வாக்கை தே.மு.தி.க. பெறவில்லை. இதனால் கட்சியில் இருந்து பலர் வெளியேறி மாற்றுக்கட்சிகளில் சேர்ந்துள்ளனர்.

    இதற்கிடையில் விஜயகாந்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து கட்சி தொடர்பான பெரும்பாலான கூட்டங்களை விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான
    பிரேமலதாவே
    முன்னின்று நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் அறிவித்துள்ளனர்.

    விஜயகாந்த்


    விஜயகாந்த்  தலைவராக தொடரும் நிலையில் உடல் நிலை காரணமாக அவரால் முன்பு போல் செயல்பட முடியவில்லை. எனவே கட்சியில் பொருளாளராக இருக்கும் பிரேமலதாவுக்கு செயல் தலைவர் பதவி வழங்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் சிலர் வலியுறுத்தி உள்ளனர்.

    இதனை அமைதியாக கேட்டுக்கொண்ட பிரேமலதா, கேப்டனுடன் ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என கூறி இருக்கிறார்.

    அதே நேரத்தில் கட்சியில் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி அந்த பதவிக்கு பிரேமலதாவை நியமிக்க வேண்டும் எனவும் மாவட்ட செயலாளர்கள் பலர் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

    இந்த 2 பதவிகளில் ஏதாவது ஒன்றில் கண்டிப்பாக பிரேமலதாவை நியமித்து கட்சியில் அவரை முன்னிறுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை மாவட்ட செயலாளர்கள் பலர் தெரிவித்து இருக்கிறார்கள்.

    இதுதொடர்பாக மீண்டும் ஆலோசனை நடத்தி முடிவு செய்யலாம் என கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களிடம் கூறி இருக்கிறார்கள்.

    தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற வியூகம் வகுக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பிரேமலதா அறிவுறுத்தி உள்ளார். கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் கட்சியினர் பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்பதுடன் அவர்களின் குறைகளை கேட்டு நம்பிக்கையை பெற வேண்டும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டார்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தற்போதைய சூழலில் கூட்டணிக்கான வாய்ப்பு இல்லை எனவும், எனவே தனித்து போட்டியிடுவதற்கு கட்சியினர் தயாராக இருக்க வேண்டும் எனவும் தே.மு.தி.க. தலைமை சார்பில் மாவட்ட செயலாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற வகையில் கட்சியில் தகுதியான நபர்களை தேர்வு செய்து தலைமைக்கு மாவட்ட செயலாளர்கள் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதுபோன்ற நபர்களை வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றி பெறுவதற்கு அனைத்து நிர்வாகிகளும் உழைக்க வேண்டும் எனவும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முழுமனதாக தீர்மானிக்கப்பட்டது.



    Next Story
    ×