search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவி பாத்திமா
    X
    மாணவி பாத்திமா

    ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா சந்தேக மரண வழக்கு- சி.பி.ஐ. விசாரணைக்கு தந்தை ஆஜர்

    சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா மரண வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணையில் அவரது தந்தை ஆஜராகி 5 மணி நேரம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
    சென்னை:

    கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் பாத்திமா. இவர் சென்னை ஐ.ஐ.டி.யில் முதலாம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி அன்று மாணவி பாத்திமா தான் தங்கி இருந்த விடுதி அறையில் சந்தேகத்துக்கு இடமாக தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து முதலில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இதற்கிடையில் மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் சென்னை வந்தார். கோட்டூர்புரம் போலீசார் முறையாக வழக்கை விசாரிக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். இதனால் இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.

    ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் திருப்தி இல்லை என்றும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அப்துல் லத்தீப் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட்டு உத்தரவுப்படி இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

    சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 2 ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப்பை விசாரணைக்கு ஆஜராக சி.பி.ஐ. போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதை ஏற்று அப்துல் லத்தீப் நேற்று சென்னை பெசன்ட்நகர் ராஜாஜி பவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார்.

    காலை 10.30 மணியில் இருந்து பாத்திமா சாவு தொடர்பாக அப்துல் லத்தீப் சுமார் 5 மணி நேரம் சி.பி.ஐ. போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்ததாக தெரிகிறது. அப்போது அவர் பாத்திமாவின் சாவில் உள்ள சந்தேகங்கள் தொடர்பாக பல்வேறு ஆதாரங்களை எடுத்துக்கூறியதாக சொல்லப்படுகிறது.

    இந்த வழக்கு விசாரணை சரியான பாதையில் செல்வதாகவும், குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என்றும் சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    முன்னதாக நேற்று காலை விமானத்தில் சென்னை வந்த அப்துல் லத்தீப் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எனது மகள் பாத்திமாவின் சந்தேக சாவு தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடக்கிறது. என் மகளின் செல்போனில் குற்றவாளிகள் பற்றிய ஆதாரங்கள் உள்ளன. சி.பி.ஐ. போலீசார் நியாயமாக விசாரணை நடத்துவார்கள் என்று நம்புகிறேன். வாய்ப்பு கிடைத்தால் தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து பேசுவேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×