search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேமரா
    X
    கேமரா

    போலீஸ் தம்பதி வீட்டின் முன்பு வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா அகற்றப்பட்டது ஏன்?- கமிஷனர் அலுவலகம் விளக்கம்

    திருச்சியில் வீடியோ வைரலான விவகாரத்தில் போலீஸ் தம்பதி வீட்டின் முன்பு வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா அகற்றப்பட்டது ஏன்? என போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
    திருச்சி:

    திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருபவர் ஜனார்த்தனன். இவரது மனைவி சுமதி. இவர் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ்நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

    இந்த தம்பதி திருச்சி மார்சிங்பேட்டையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். நேற்று முன்தினம்இந்த தம்பதி வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அந்த வீடியோவில் காவலர் குடியிருப்பில் பாதுகாப்பு இல்லை என்றும், தங்கள் வீட்டின் முன்பு வைத்து இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் அகற்றி சென்று விட்டதாகவும் கூறி இருந்தனர்.

    இந்த வீடியோ தொடர்பாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காவலர் குடியிருப்பில் குடிதண்ணீர் பிடிக்கும் தொட்டியை பார்த்தவாறு கண்காணிப்பு கேமரா அமைந்துள்ள காரணத்தால் மற்ற பெண்கள் தண்ணீர் பிடிப்பதை அவர்கள் ஆட்சேபித்ததாலும், மற்றவர்கள் வீட்டின் முன்பு உள்ள பொதுவான உபயோகத்தில் உள்ள இடத்தை மற்றவர்கள் உபயோகிக்க முடியாதவாறு கம்பிவேலி அமைத்து தன் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்த முயல்கிறார் என காவல் குடும்பத்தினர் ஆட்சேபனை செய்து குறை தெரிவித்தனர். இது குறித்து பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை செய்து மற்றவர்கள் தண்ணீர் பிடிக்க கூடாது என கண்காணிப்பு கேமரா வைத்திருப்பதும், பொதுவான இடத்தை ஆக்கிரமிக்க முயல்வதும் உண்மையென தெரியவந்ததால் ஆக்கிரமிப்புகளையும் கண்காணிப்பு கேமராவைவும் அகற்றினர். தமிழக அரசு ஆணைப்படி காவல்துறையினருக்கு வார ஓய்வு அளிக்கப்படுகிறது. அதைபோல் ஜனார்த்தனன், சுமதிக்கும் வார ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. காவலர்களின் குறைதீர்க்கும் கூட்டம் வாரந்தோறும் நடத்தப்பட்டு உடனுக்குடன் குறைகள் தீர்க்கப்பட்டு வருகிறது. மேற்கூறிய குறைகள் குறித்து ஜனார்த்தனன் எந்தவித மனுவும் அளிக்கவில்லை.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
    Next Story
    ×