search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விசாரணை
    X
    விசாரணை

    மாணவிக்கு பாலியல் தொல்லை- அரசு பள்ளி ஆசிரியரிடம் விசாரணை

    நாமக்கல்லில் அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தொடர்பாக ஆசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1200 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஏழை, எளிய பெற்றோர்களின் குழந்தைகள் தான் இங்கு அதிகம் படிக்கிறார்கள்.

    இந்த நிலையில் இப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அறிவியல் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக மாணவியின் பெற்றோர் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரியை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    எங்களது மகள் செல்போன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் டிசம்பர் 4-ந்தேதி பிறந்த நாள் அன்று இறந்த நாளாக இருக்கும் என குறிப்பிட்டிருந்தார். மேலும் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டார். உடனடியாக அவரை தடுத்து சமாதானம் செய்ததுடன் காரணம் குறித்து கேட்டபோது, ஆசிரியர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்வது குறித்து தெரிவித்தார்.

    இது பற்றி நாங்கள், சக தோழிகளிடம் விசாரித்ததில், நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்புக்கு அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியர் மதிவாணன் (வயது 54) பாலியல் தொல்லை கொடுப்பதாக தெரிவித்தனர். மேலும் மாணவிகளுடைய கையை பிடித்து இழுப்பது, தொடுவது என தொந்தரவு செய்வதாகவும், இதை வெளியே சொன்னால் தேர்வில் மதிப்பெண் குறைத்து விடுவேன் என மிரட்டுவதாகவும், இதனால் தான் மன உளைச்சலில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் இறக்க போகும் தேதியை குறிப்பிட்டு வைத்துள்ளார் என சக மாணவிகள் தெரிவித்தனர்.

    இதுபோல் வெளியே சொல்ல முடியாமல் பல மாணவிகள் தவிக்கின்றனர். எனவே ஆசிரியர் மதிவாணனிடம் விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

    மேலும் இது தொடர்பாக பெற்றோர் நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் ஆசிரியரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதுபோல் புகார் அளித்த மாணவியின் பெற்றோர், சம்மந்தப்பட்ட மாணவியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே மாணவியின் பெற்றோர் கொடுத்த புகார் உண்மைக்கு மாறானது என கூறி ஆசிரியருக்கு ஆதரவாக சக ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் நாமக்கல் அரசு பெண்கள் பள்ளி வளாகத்தில் நேற்று இரவு திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி ஆசிரியர்கள் 59 பேர், இதர பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் 60 பேர் என மொத்தம் 119 பேர் வெகு நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் பள்ளி வளாகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
    Next Story
    ×