search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலையில் திறந்தவெளியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் - நோய் பரவும் அபாயம்

    உடுமலை நகரில் நாள் ஒன்றுக்கு ஒரு டன் வரையிலான மருத்துவக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு பாதுகாப்புடன் அழிக்கப்பட்டு வருகின்றன.
    உடுமலை:

    உடுமலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவக்கழிவு மேலாண்மைத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. மருத்துவக் கழிவுகளை பாதுகாப்புடன் அகற்றி அழிக்கும் பணியின் பொருட்டு கோவை ‘பயோ வேஸ்ட்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    அவ்வகையில் உடுமலை நகரில் நாள் ஒன்றுக்கு ஒரு டன் வரையிலான மருத்துவக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு பாதுகாப்புடன் அழிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை ஒட்டிய பல இடங்களில், திறந்தவெளியில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுகிறது.

    இதனால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என அனைத்து மருத்துவ நிறுவனங்களில், மருத்துவக்கழிவுகள் குறித்த பதிவேடு சரிவர கையாளப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

    சில தனியார் மருத்துவமனைகளில் சேகரமாகும் மருத்துவக்கழிவுகள் குறித்த விபரங்கள் பதிவேடுகளில் சரிவர குறிப்பிடப்படுவதில்லை. குறிப்பிட்ட அளவிலான மருத்துவக்கழிவுகளை மட்டும் தனியார் அமைப்பிடம் ஒப்படைத்து மீதமுள்ள கழிவுகள் திறந்த வெளியில் கொட்டப்படுகிறது.

    அதேபோல் அவற்றை சேகரித்துச் செல்லும் தனியார் அமைப்பின் வாகனத்திலும் அதற்கான பதிவேடுகள் உள்ளதாக என ஆய்வு நடத்த வேண்டும். மருத்துவமனைகளில் சரிவர கழிவுகளை பிரித்து அளிப்பதை, நகராட்சி சுகாதாரத்துறையினர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    அவிநாசி ஒன்றியத்தில் பெரும்பாலான ஊராட்சிகளில் குப்பை கொட்ட உரிய இடமில்லை. கொட்டப்படும் குப்பையும் சரிவர அகற்றப்படுவதில்லை என்ற புகார் இருந்து வருகிறது. இதில் அவிநாசி - ஈரோடு ரோட்டில் பழங்கரை ஊராட்சி எல்லையில் சாலையோரம் குப்பை கொட்டுவதை அங்குள்ள மக்கள், கடைக்காரர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இதனால் பல நேரங்களில் குப்பை குவிந்து விடுகிறது. ‘அங்கு குப்பை கொட்டக்கூடாது’ என பழங்கரை ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும்  மக்கள் தொடர்ந்து அதே இடத்தில் குப்பை கொட்டி வருகின்றனர். இதனால் குப்பையை அகற்ற ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் திணறுகின்றனர். 

    சில நேரங்களில், குப்பை தீயிட்டு கொளுத்தப்படுகிறது. இதனால் புகை மாசு ஏற்படுகிறது. புகையால் அவ்வழியாக செல்லும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். இப்பிரச்சினைக்கு பழங்கரை ஊராட்சி நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    Next Story
    ×