search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அபராதம்
    X
    அபராதம்

    நெல்லையில் 3 கல்குவாரிகளுக்கு ரூ.25 கோடி அபராதம் - அதிகாரிகள் நடவடிக்கை

    குவாரியை நிரந்தரமாக மூடினால் தான் தங்களால் நிம்மதியாக வாழ முடியும் என்றும் ராதாபுரம் தொகுதி பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும், போராட்டம் நடத்தியும் வருகின்றனர்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா பகுதியில் தனியாருக்கு சொந்தமாக ஏராளமான கல்குவாரிகள் அமைந்துள்ளன. இதில் ஒரு சில குவாரிகளில் இருந்து குமரி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்திற்கு கனிம வளங்கள் கடத்தி செல்லப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    மேலும் மாவட்ட கலெக்டர் விஷ்ணுவிடம், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமான மனுக்கள் அளித்துள்ளனர். அதில் ராதாபுரம் தாலுகாவில் கல்குவாரிகளில் பாறைகளைத் தகர்க்க சக்தி வாய்ந்த வெடிகளை பயன்படுத்துவதால் வீடுகளில் அளவுக்கு அதிகமான அதிர்வுகள், சுவர்களில் விரிசல் ஏற்படுவதாக தெரிவித்திருந்தனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடு இடிந்து ஒரு வயது குழந்தையும் பலியானது. இந்த புகாரின் பேரில் அப்போதைய சேரன்மகாதேவி சப்-கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி மற்றும் துணை இயக்குநர்(புவியியல்), சுரங்கத்துறை அதிகாரிகள் தலைமையிலான விசாரணை குழு புகாருக்குள்ளான குவாரிகளில் ஆய்வு செய்தது.

    இதில் சில குவாரிகளில் மாவட்ட நிர்வாகம் வழங்கிய கனிமம் குத்தகை தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட சுரங்க திட்டம் வரைபடத்தை மீறி அளவுக்கு அதிகமாக கனிமவளம் சுரண்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஒரு குவாரி உரிமையாளருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை வெட்டி எடுத்ததாகவும், நடை சீட்டில் குளறுபடிகள் செய்ததாகவும் கூறப்பட்டு இருந்தது. அதற்காக ரூ.20 கோடி அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    மேலும் உரிமையாளர் நாளை(செவ்வாய்க்கிழமை) காலை மாவட்ட நிர்வாகம் முன்பு ஆஜராக வேண்டும் என்றும், அவ்வாறு ஆஜராக தவறினால் குவாரியை நிரந்தரமாக சீல் வைத்து விடுவதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல் அந்த பகுதியில் விதிகளை மீறி செயல்பட்ட 2 குவாரிகளுக்கு முறையே ரூ. 5 கோடி மற்றும் ரூ.8¾ லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த கல்குவாரியை ஆய்வு செய்த ஆர்.டி.ஓ. சிவகிருஷ்ணமூர்த்தி, ஆய்வு முடிந்த சில நாட்களிலேயே பணியிடம் செய்யப்பட்டார்.

    இதற்கிடையே குவாரியை நிரந்தரமாக மூடினால் தான் தங்களால் நிம்மதியாக வாழ முடியும் என்றும் ராதாபுரம் தொகுதி பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும், போராட்டம் நடத்தியும் வருகின்றனர்.

    Next Story
    ×