search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழை சாகுபடி
    X
    வாழை சாகுபடி

    அவிநாசி ஏற்றுமதி மண்டலமாக மாற விவசாயிகள் ஒருங்கிணைந்து வாழை சாகுபடி செய்ய வேண்டும்-வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தல்

    கடந்தாண்டு கொரோனா ஊரடங்கால் கேரள வர்த்தகம் முடங்கியது.விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
    அவிநாசி:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டாரத்தில் 1,600 ஏக்கருக்கும் மேல் நேந்திரன், செவ்வாழை சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். விளைவிக்கப்படும் வாழை 40 சதவீதம் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு தயாரிக்கப்படும் சிப்ஸ் நாட்டின் பல இடங்களிலும் பிரபலம்.

    இதுதவிர முதல் தர வாழை சென்னை, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அவிநாசி வட்டார விவசாயிகளின் முக்கிய பொருளாதாரமாக வாழை சாகுபடி விளங்கி வருகிறது.

    கடந்தாண்டு கொரோனா ஊரடங்கால் கேரள வர்த்தகம் முடங்கியது. விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ள போதும் முந்தைய அளவுக்கு வர்த்தகம் இல்லை என  விவசாயிகள் புலம்புகின்றனர்.

    அவ்வப்போது பெய்யும் மழை, வீசும் காற்றுக்கு வாழைகள் சேதமடைகின்றன. நிலையற்ற விவசாயமாக வாழை சாகுபடி மாறியுள்ள நிலையில் அவிநாசியில் வாழை ஏல மையம் மற்றும் ஏற்றுமதி மண்டலம் அமைப்பதற்கான வாய்ப்பு குறித்து வேளாண் விற்பனை வணிகத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    அவிநாசியில் அதிகம் விளையும் நிலக்கடலை மற்றும் பருத்திக்கு கூட்டுறவு துறை சார்பில் ஏல மையங்கள் செயல்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்  சேவூரில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் வாழை ஏல மையம் செயல்பட்டு வந்தது.

    சில வியாபாரிகள் சரியான முறையில் பணம் செலுத்தாததாலும், அழுகும் பொருளான வாழையை இருப்பு வைத்து விற்க முடியாததாலும் ஏல மையத்தின் செயல்பாடு நிறுத்தப்பட்டது. இது ஒரு புறமிருக்க குறைந்தது  300 முதல் 500 விவசாயிகள் இணைந்து  உழவர் உற்பத்தியாளர் குழுவாகவும் 500 முதல் 1,000 விவசாயிகள் இணைந்த குழு, உழவர் உற்பத்தியாளர் நிறுவனமாகவும் செயல்பட முடியும்.

    நிறுவனத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிதி உதவிகளை அளிக்கின்றன. விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்வதால் லாபம் அதிகம் பெற முடியும்.ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகளவு வாழை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    வாழை ஏற்றுமதி செய்வதற்கென சில நிபந்தனைகள் உள்ளன. பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மட்டுமே உரங்களை பயன்படுத்த வேண்டும். வாழையின் தரம் ஏற்றுமதி தரத்துக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் உள்ளன.

    விவசாயிகள் ஒருங்கிணைத்து குறிப்பிட்ட பரப்பளவு நிலத்தில்  ஏற்றுமதி தரத்துக்கான வாழையை சாகுபடி செய்யும் பட்சத்தில், தேவையான தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க தயாராக உள்ளோம்.இவ்வாறு  அவர்கள் கூறினர். 
    Next Story
    ×