search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    மழை தண்ணீர் தேங்கியதால் பந்தல் சாகுபடி-கொப்பரை உற்பத்தி பாதிப்பு

    அதிக அளவு தண்ணீர் தேங்கியுள்ளதால், விளைநிலங்களுக்குள் சென்று காய்களை பறிக்கவும், வழியில்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
    உடுமலை:

    உடுமலை சுற்றுப்பகுதியில் கிணற்றுப்பாசனத்துக்கு விளைநிலங்களில் பந்தல் அமைத்து பீர்க்கன், புடலங்காய், பாகற்காய் உட்பட பல்வேறு சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

    இதில் பந்தல் அமைப்பதற்கு ஏக்கருக்கு ரூ.1.50 லட்சத்திற்கும் அதிகமாக செலவு பிடிக்கிறது. மேலும் சொட்டு நீர் பாசனம் அமைக்கவும், கூடுதலாக செலவிடுகின்றனர்.

    இந்நிலையில் நடப்பு சீசனில் வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்ததால் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி வேர் அழுகல் உட்பட பல்வேறு நோய்த்தாக்குதல் சாகுபடியில் ஏற்பட்டு செடிகள் கருகி வருகிறது. 

    அதிக அளவு தண்ணீர் தேங்கியுள்ளதால், விளைநிலங்களுக்குள் சென்று  காய்களை பறிக்கவும், வழியில்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 

    ‘வழக்கத்தை விட, கூடுதலாக பெய்த மழையால் விளைநிலங்களில் இருந்து தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை. இதனால் செடிகள் முற்றிலுமாக அழுகி ஏக்கருக்கு ரூ.25 ஆயிரத்திற்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

    தோட்டக்கலைத்துறை வாயிலாக  ஆய்வு நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசிடம் நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என்றனர். வழக்கமாக ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கொப்பரை விலை உயரும். ஆனால் இந்த ஆண்டு தொடர்ந்து அடை மழை பெய்ததால் கொப்பரை உற்பத்தி முடங்கியது. 

    ஆனால் கொப்பரை விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ஒரு கிலோ கொப்பரை ரூ.100 என்ற அளவிலேயே உள்ளது.

    இதனால் விலை உயர்வை எதிர்பார்த்து தேங்காய்இருப்பு வைத்திருந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதுகுறித்து கொப்பரை விவசாயிகள் கூறியதாவது:-

    தேங்காய் எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்துவதில் கலப்படக்காரர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். விலை அதிகரிக்கும் பொழுது விலை மலிவான எண்ணெய்களை கலந்து விற்பனை செய்கின்றனர்.  

    இதனால் தேங்காய் விலை உயர்வது செயற்கையாக கட்டுப்படுத்தப்படுகிறது. அரசும் வெளிநாட்டு எண்ணெய்களுக்கு மானியம் கொடுத்து விற்பனை செய்கிறது.

    அரசும், தனியாரும் இப்படி கூட்டு சேர்ந்து விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதால் தென்னை விவசாயிகளுக்கு பாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது என்றனர். 

    கார்த்திகை பட்டத்தில் நடவு செய்வதற்காக நாற்றுப் பண்ணைகளில் தக்காளி, கத்தரி, மிளகாய் உள்ளிட்ட நாற்றுகளை தயார் செய்து வைத்திருந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்ததால் விவசாயிகளால் உழவுப் பணி மேற்கொள்ள இயலவில்லை. 

    நாற்று உற்பத்தி செய்ததில் இருந்து 25 நாட்களில் நடவு செய்ய வேண்டும். மழை சராசரியாக பெய்து இருந்திருந்தால் ஐப்பசி மாத இறுதியிலேயே விவசாயிகள் நடவு பணியை துவக்கி இருப்பர்.

    மழை நீடித்ததால் நடவுப்பணி தாமதமாகி விட்டது. இதனால், நாற்றுகளுக்கு வயது அதிகமாகிவிட்டது. வயது அதிகமான நாற்றுகளை நடவு செய்தால் மகசூல் பாதிக்கும் என்பதால் அவற்றை வாங்குவதற்கு விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர். 

    இதனால் பண்ணைகளில் ஏராளமான நாற்றுகள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது நாற்று உற்பத்தி செய்பவர்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    Next Story
    ×