search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் மாவட்டத்தில் 11 மாதங்களில் 850மி.மீ.,மழை பதிவு - கிணறுகளில் நீர்மட்டம் அதிகரிப்பு

    தென்மேற்கு பருவத்தில் 154.80 மி.மீ., பெய்ய வேண்டியது 155.57 மி.மீ., மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவம் 3 மாதங்களை கொண்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் ஒவ்வொரு 10 ஆண்டு மழை பொழிவை கணக்கிட்டு சராசரி மழை அளவு நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது சராசரி அளவு 618.30 மி.மீ., என கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜனவரி, பிப்ரவரி மாதங்களை உள்ளடக்கிய குளிர் பருவத்தில் 8 மடங்கு அதிக மழை பெய்துள்ளது.

    அதாவது 14 மி.மீ., பெய்ய வேண்டியது 127 மி.மீ., அளவுக்கு பதிவாகியுள்ளது. கோடையில் 135.10 மி.மீ., பெய்ய வேண்டியது 99.44 மி.மீ., மட்டுமே பதிவாகியுள்ளது. அதிலும் மார்ச் மாதம் ஒரு மி.மீ., அளவுக்கும் குறைவான மழை மட்டும் பெய்திருந்தது. 

    தென்மேற்கு பருவத்தில் 154.80 மி.மீ., பெய்ய வேண்டியது 155.57 மி.மீ., மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவம் 3 மாதங்களை கொண்டது. 2 மாதங்கள் மட்டும் நிறைவு பெற்றுள்ளது. அக்டோபர் மாதம் 147.80 மி.மீ., பெய்ய வேண்டியது 197.71 மி.மீ., பெய்துள்ளது. 

    நவம்பர் மாதம் 120 மி.மீ., பெய்ய வேண்டியது 269. 49 மி.மீ., மழை பெய்துள்ளது. நடப்பு மாதத்தில் இதுவரை 12.11 மி.மீ., பெய்துள்ளது. வடகிழக்கு பருவத்தில் 314.30 மி.மீ., பெய்ய வேண்டியது 479.31 மி.மீ., அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. 

    மாவட்ட எல்லையில் இதுவரை பெய்யாத அளவுக்கு 862.28 மி.மீ., அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. 11 மாதங்களில் 850 மி.மீ., பெய்துள்ளது.

    இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:

    மாவட்டத்தில் வடகிழக்கு மற்றும் குளிர் பருவத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. குளிர்கால மழையால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை. தற்போது விவசாய கிணறுகளில் மோட்டாரை உயர்த்தி வைக்கும் அளவுக்கு  தண்ணீர் மட்டம் அதிகரித்துள்ளது. பயன்படாத ‘போர்வெல்’களில் தண்ணீர் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    உடுமலை அருகே ஆலாம்பாளையத்தில் 76 ஏக்கர் பரப்பில், பூசாரிநாயக்கன் குளம் அமைந்துள்ளது. இக்குளத்துக்கு முன்பு  மழை நீர் ஓடைகள் மூலம் நீர்வரத்து கிடைத்து வந்தது. பருவமழை பொழிவு குறைவு உள்ளிட்ட காரணங்களால், ஆண்டில் பல மாதங்கள் தண்ணீரின்றி குளம் வறண்டு காணப்படும்.

    சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, தென்னை சாகுபடியும் பாதிக்கும் நிலை இருந்தது. திருமூர்த்தி அணை கட்டப்படும் முன்னர் பாலாற்றின் மூலம் பூசாரிநாயக்கன் குளத்துக்கு நீர்வரத்து கிடைத்தது. அதன் அடிப்படையில் பி.ஏ.பி., திட்டத்தில் குளத்தை சேர்த்து தண்ணீர் வழங்க விவசாயிகள் வலியுறுத்தினர்.

    நீண்ட கால போராட்டத்துக்குப்பிறகு கடந்த 2012 முதல் பி.ஏ.பி., கால்வாய் வழியாக குளத்துக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. தற்போது மண்டல பாசன காலத்தில் அரசாணை அடிப்படையில் பூசாரிநாயக்கன் குளத்துக்கு பி.ஏ.பி., கால்வாயில் இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. 

    நடப்பு சீசனில் தொடர் மழை மற்றும் விளைநிலங்களில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் நீர் வரத்து அதிகரித்து குளம் நிரம்பியுள்ளது. இவ்வாறு குறிப்பிட்ட இடைவெளியில் குளம் நிரம்புவதால் சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:

    பி.ஏ.பி., கால்வாயில், இருந்து குளத்துக்கு தண்ணீர் வரும் ஓடையை குறிப்பிட்ட இடைவெளியில் சீரமைக்க வேண்டும். சுற்றுப்பகுதியிலுள்ள மழை நீர் ஓடைகளில் சீமை கருவேல மரங்களை அகற்றி தூர்வாரினால் குளம் எளிதில் நிரம்பும். ஆண்டுக்கு இரு முறை குளத்தை நிரப்பினால் சுற்றுப்பகுதியிலுள்ள 15 கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் நிலையாக இருக்கும் என்றனர்.
    Next Story
    ×