search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

    கொரோனா ஊரடங்கு காரணமாக 2 ஆண்டாக சுற்றுலா பயணிகளை பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல அனுமதிக்கவில்லை.
    உடுமலை:

    உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில் பாலாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. திருமூர்த்தி அணை மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவி, வண்ண மீன் பூங்கா, நீச்சல் குளம் என ஆன்மிகம் மற்றும் சுற்றுலா மையமாக உள்ளது.

    பிரசித்தி பெற்ற திருமூர்த்திமலைக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பஞ்சலிங்கம் அருவிக்கு சென்று உற்சாகமாக குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக 2 ஆண்டாக சுற்றுலா பயணிகளை பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல அனுமதிக்கவில்லை.

    இதனால் திருமூர்த்திமலைக்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். ஊரடங்கு தளர்வுகள் அறிவித்து பிற சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்ட நிலையில் தொடர் மழை காரணமாக  திறப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

    உடுமலை ஒன்றிய அலுவலகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளம் திறக்கப்பட்ட நிலையில் பஞ்சலிங்கம் அருவிக்கும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. தற்போது, சபரிமலை சீசன் துவங்கியுள்ளது.

    சபரிமலைக்கு சென்று திரும்பும் பக்தர்கள் திருமூர்த்திமலைக்கு வந்து பஞ்சலிங்கம் அருவியில் குளித்து விட்டு மும்மூர்த்திகளையும் வழிபட்டு செல்கின்றனர்.

    தற்போது சீசன் துவங்கியுள்ளதால் சுற்றுலா வாகனங்கள் மற்றும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. எனவே பஞ்சலிங்கம் அருவிக்கு பொதுமக்களை அனுமதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில்:

    கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் தொடர் மழை காரணமாக பாதுகாப்பு கருதி பொதுமக்கள் அனுமதிக்கவில்லை. தற்போது மழை குறைந்துள்ளது. 

    மாவட்ட நிர்வாகம் அனுமதி பெற்று அருவிக்கு செல்லும் மலைப்பாதை உடைமாற்றும் அறை, கழிப்பிடம், அருவியில் நின்று குளிக்கும் வகையிலுள்ள பாதுகாப்பு கட்டமைப்புகள் புதுப்பிக்கப்பட்டு அதற்கு பின் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். விரைவில் திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
    Next Story
    ×