search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பங்களிப்பு தொகையை செலுத்தி வீடுகளில் குடியேற பொதுமக்களுக்கு வேண்டுகோள்

    அவிநாசி நல்லாற்றை ஒட்டி வசித்து வரும் 106 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
    அவிநாசி:

    நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அவிநாசி, சூளை, திருமுருகன்பூண்டி, பல்லடம் அறிவொளி நகர் உள்ளிட்ட பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

    ஓடை புறம்போக்கில் வசிக்கும் மக்கள், வீடில்லாத ஏழை, எளியோர், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத் திறனாளிகள், உள்ளாட்சி  தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தகுதி அடிப்படையில் வீடுகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. அவிநாசி, சேவூர் ரோடு, சூளையில் 448 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது. 

    இதில் 203 பேருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 75க்கும் குறைவானவர்களே இதுவரை தங்களின் பங்களிப்பு தொகையை செலுத்தியுள்ளனர்.

    அவிநாசி நல்லாற்றை ஒட்டி வசித்து வரும் 106 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 20க்கும் குறைவானவர்கள் மட்டுமே வீடு பெற முன்வந்து அதற்குரிய தொகையை செலுத்தியுள்ளனர். எஞ்சியவர்கள் தொகை செலுத்தவில்லை.

    இதுகுறித்து நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

    அடுக்குமாடி குடியிருப்புக்கு 2,000 பயனாளிகளை கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார். அந்த வகையில் வீடுகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. வீடு ஒதுக்கியும் அதற்குரிய தொகையை செலுத்தாமல் உள்ளவர்களுக்கு விளக்கம் கேட்டு 3 மாத காலம் அவகாசம் வழங்கி ‘நோட்டீஸ்’ வழங்கப்பட்டுள்ளது.

    அதற்குள் அவர்கள் வீடுகளை பெற முன்வராத பட்சத்தில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட வீடுகள், காத்திருப்போர் பட்டியலில் உள்ள பிற விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டு விடும். 

    தற்போது வீடு வேண்டாம் எனக் கூறுவோர் மீண்டும் வீடு கேட்டு விண்ணப்பிக்கும் பட்சத்தில் வேறு இடத்தில் வீடுகள் காலியாக இருந்தால் அங்கு ஒதுக்கப்படும். மாறாக அவர்கள் விரும்பும் இடம் கிடைக்காது .இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×