search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தை 1ந்தேதியை தமிழ் புத்தாண்டு தினமாக அறிவிக்ககூடாது - இந்து முன்னணி மாநில தலைவர் அறிக்கை

    மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக மொழிவெறி, இனவெறி அரசியலை தி.மு.க. மீண்டும் கையில் எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
    திருப்பூர்:

    சித்திரை புத்தாண்டை மாற்றி மீண்டும் தை 1-ந்தேதியை தமிழ் புத்தாண்டு தினமாக அறிவிக்கும் தி.மு.க. அரசின் முடிவுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. 

    இதுகுறித்து இந்து முன்னணி-மாநிலத் தலைவர் திருப்பூரை சேர்ந்த காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

    வெள்ள பாதிப்புகளால் மக்கள் அவதிக்குள்ளாகி நிவாரணத்திற்கு வழியின்றி தவிக்கும் வேளையில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக மொழிவெறி, இனவெறி அரசியலை தி.மு.க. மீண்டும் கையில் எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    கடந்த 2008-ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு தை 1-ந் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்தது. இதை தமிழ் அறிஞர்கள், சமய பெரியோர்கள் கண்டித்தனர். அறிவியல் பூர்வமாகவும், ஆதாரபூர்வமாகவும் சித்திரை 1-ந்தேதி தான் தமிழ் புத்தாண்டு என்று ஆணித்தரமாக எடுத்துரைத்தனர். தி.மு.க.வின் அறிவிப்பை மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.

    இதைக்கருத்தில் எடுத்துக் கொண்ட ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு 2011ம் ஆண்டு தை1 புத்தாண்டு என்பதை விலக்கி கொண்டு சித்திரை முதல் நாள் புத்தாண்டு என்று அறிவித்தது.

    தற்போதைய தி.மு.க.அரசு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், தொன்றுதொட்டு கடைப்பிடித்து வருகின்ற புத்தாண்டின் மரபிற்கு பங்கம் விளைவித்து தமிழர்களின் மாண்பை சீர்குலைக்கலாமா?. வரலாற்றை திரித்து கூறுவதில் தி.மு.க.விற்கு நிகர் வேறு யாருமில்லை என்பதை தமிழுலகம் நன்கு அறியும்.  

    மதமாற்ற சக்திகளுக்கு துணை போகும் தி.மு.க.வின் செயல்பாட்டை இந்து முன்னணி கண்டிக்கிறது.தை 1-ந்தேதியை தமிழ் புத்தாண்டு தினமாக அறிவிக்கக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×