search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    கன்னியாகுமரி அருகே நகை திருட்டு வழக்கில் இளம்பெண் கைது

    கன்னியாகுமரி அருகே நகை திருட்டு வழக்கில் இளம்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே லீபுரம் லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 58). இவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புஷ்பம் (54). இந்த தம்பதியரின் ஒரே மகள் சங்கீதா (25). இவரை கும்பகோணத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். பிரசவத்திற்காக சங்கீதா கடந்த 45 நாட்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு வந்தார்.

    நேற்று வீட்டைப் பூட்டிவிட்டு சங்கீதாவை அவரது தாயார் நாகர்கோவிலில் உள்ள ஓரு தனியார் ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு அழைத்து சென்றார். பகல் 2 மணியளவில் அவர்கள் இருவரும் வீட்டுக்கு திரும்பி வந்த போது கதவு திறந்து கிடந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறிக் கிடந்தன.

    பிரோவில் வைக்கப்பட்டு இருந்த 17¾ பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. செல்லப்பன் கன்னியாகுமரி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி ராஜா, இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கொள்ளையடிக்கப்பட்ட நகையின் மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தடய அறிவியல் நிபுணர்களும் கொள்ளை நடந்த வீட்டிற்கு வந்து, அங்கு பதிவாகியிருந்த கைரேகை மற்றும் தடயங்களை ஆய்வு செய்தனர்.

    இதற்கிடையே சம்பவ இடத்திற்கு துப்பறியும் நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் மோப்பம் பிடித்துக்கொண்டே பக்கத்து வீட்டின் அருகே நின்றது. இதையடுத்து போலீசார் பக்கத்துவீட்டில் வசித்து வரும் சொர்ணலதா (30) என்ற பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

    அவரது கைரேகையும், கொள்ளை நடந்த வீட்டில் பதிவான கைரேகையும் ஒத்துபோனது. எனவே அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் அந்த பெண் தான் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×