search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜிகே வாசன்
    X
    ஜிகே வாசன்

    பொங்கல் பரிசு பொருட்களை தமிழக அரசு விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்ய வேண்டும்- ஜி.கே.வாசன்

    தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்கும் தொகுப்பில் உள்ள பொருட்களை விவசாயிகளிடமும், வியாபாரிகளிடமும் நேரடியாக கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு அறிவித்தபடி பொங்கல் பரிசுத் தொகுப்பை விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் வழங்க வேண்டும்.

    வருகின்ற 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதத்தில் வருகின்ற தைப்பொங்கலை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

    இத்தொகுப்பில், பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக்கால சமையலுக்குத் தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2,15,48,060 குடும்பங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கரும்பு

    இத்தொகுப்பில் உள்ள 20 பொருட்களோடு கரும்பும் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் விவசாயிகள் தங்களிடம் கரும்பை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

    காரணம் பருவமழை, வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்தால் ஓரளவுக்கு விவசாயிகள் நஷ்டத்தில் இருந்து மீள்வார்கள்.

    மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள பொருட்களை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

    குறிப்பாக மாநில அளவில், மாவட்ட அளவில் விவசாயிகள் கொண்ட குழுவை அமைத்து அந்தந்த மாவட்ட விவசாயிகளிடம் கிடைக்கும் பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

    விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அவர்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழக அரசு செயல்பட வேண்டும்.

    விவசாயிகளிடம் கிடைக்காத பொருட்களை வியாபாரிகளிடம் வாங்கலாம். இதன் மூலம் அந்தந்த மாவட்ட விவசாயிகள், வியாபாரிகள் பயனடைவார்கள்.

    விவசாயிகளிடமும், வியாபாரிகளிடமும் கொள்முதல் செய்தால் அவர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைவார்கள்.

    எனவே தமிழக அரசு, பொங்கல் பரிசு வழங்கும் தொகுப்பில் உள்ள பொருட்களை விவசாயிகளிடமும், வியாபாரிகளிடமும் நேரடியாக கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    Next Story
    ×