search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் ராமநாதபுரம் பெரிய கண்மாய் பகுதிக்கு வந்தடைந்து நிரம்பி வருகிறது.
    X
    மதுரை வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் ராமநாதபுரம் பெரிய கண்மாய் பகுதிக்கு வந்தடைந்து நிரம்பி வருகிறது.

    வைகை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள உபரி நீரை ராமநாதபுரம் பெரிய கண்மாயில் தேக்கி வைக்க நடவடிக்கை

    வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள உபரிநீர் ராமநாதபுரம் பெரிய கண்மாயில் தேக்கி வைக்க கலெக்டர் சங்கர்லால் குமாவத் நேரில் ஆய்வு செய்தார்.
    ராமநாதபுரம்:

    தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த சில தினங் களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமான பல்வேறு மாவட்டங்களில் உள்ள அணைகள், கண்மாய்கள், குளங்கள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் பார்த்திபனூர் மதகு அணை வழியாக ராமநாதபுரம் பெரிய கண்மாய் நோக்கி வந்து அடைகிறது. இந்த தண்ணீரை சேமிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. வைகை அணையில் இருந்து கடந்த 27-ந்தேதி அன்று நொடிக்கு 12,000 கனஅடி வீதம் பார்த்திபனூர் மதகு அணைக்கு தண்ணீர் வந்த நிலையில், 29-ந்தேதி மாலை நிலவரப்படி நொடிக்கு 5,600 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது.

    நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து வலது பிரதான கால்வாயில் நொடிக்கு 1,200 கனஅடி வீதமும், இடது பிரதான கால்வாய் மற்றும் பரளை கால்வாய் ஆகியவற்றில் நொடிக்கு தலா 800 கனஅடி வீதமும், ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு நொடிக்கு சுமார் 3,500 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    அதேவேளையில் ராமநாதபுரம் பெரிய கண்மாயில் சேமிக்கப் பட்டுள்ள நீரின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கண்மாய்க்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து கண்மாயில் இருந்து உபரிநீர் திறந்து விட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    அதையடுத்து ராமநாதபுரம் கலெக்டர் சங்கர்லால் குமாவத், காருகுடி கிராமத்தில் உள்ள தலை மதகு அணை, அரசரடி வண்டல் கிராமத்தில் உள்ள மதகு அணை ஆகியவற்றிற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- வைகை அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் கரையோரங்களில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல முன்னெச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    பொதுமக்கள், சிறுவர்கள் ஆற்றில் இறங்குதல், ஆற்றில் குளித்தல், மொபைல் போன்களில் செல்பி எடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் மதனசுதாகரன், மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், தாசில்தார் ரவிச்சந்திரன், உதவி செயற் பொறியாளர் நிறைமதி, உதவி பொறியாளர்கள் சீனிவாசன், ஆனந்த் பாபுஜி உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×