search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
    X
    அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

    தமிழகத்தில் 8,075 ஏரிகள் நிரம்பின- அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்

    தமிழகத்தில் பயிர் சேதங்கள் கணக்கிடும் பணி தொடர்ந்து நடைபெறுவதாகவும், 8 ஆயிரத்து 75 ஏரிகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளதாகவும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் மொத்தம் உள்ள 14 ஆயிரத்து 138 ஏரிகளில், 8 ஆயிரத்து 75 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன. 2 ஆயிரத்து 806 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேல் நிரம்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள 90 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 224.297 டி.எம்.சி.யில் 209.945 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது 93.60 சதவீதம் ஆகும்.

    டெல்டா மற்றும் இதர மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்து வருவாய், வேளாண், தோட்டக்கலை துறைகள் மூலம் கணக்கிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட 18 மாவட்டங்களில் மொத்தம் 279 முகாம்களில், 20 ஆயிரத்து 836 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 2 ஆயிரத்து 148 பேர், 15 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் 522 கால்நடைகளும், 3 ஆயிரத்து 847 கோழிகளும் இறந்துள்ளன. 2 ஆயிரத்து 623 குடிசைகள் பகுதியாகவும், 168 குடிசைகள் முழுமையாகவும் என மொத்தம் 2 ஆயிரத்து 791 குடிசைகளும், 467 வீடுகள் பகுதியாகவும், 7 வீடுகள் முழுமையாகவும் என மொத்தம் 474 வீடுகள் சேதமடைந்துள்ளன.

    மழை நீர் தேங்கியுள்ள 561 பகுதிகளில் 227 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் அகற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 334 பகுதிகளில் அதிக திறன் கொண்ட பம்புகள் மூலம் நீர் அகற்றப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×