என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
3 பேர் பலியான சாய ஆலையில் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய அதிகாரிகள் நாளை ஆய்வு
தினேஷ்பாண்டி கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி நாகராஜை மீட்டு தொட்டியின் மேல் நிற்பவர்களிடம் கொடுத்தார்.
திருப்பூர்:
திருப்பூர் வீரபாண்டி அருகே கொத்து தோட்டம் பகுதியில் தனியார் சாயப்பட்டறை செயல்பட்டு வருகிறது. இந்த சாயப்பட்டறையின் பின்புறம் 20 அடி ஆழத்தில் கழிவுநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டறையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்த தினேஷ் பாண்டி (வயது 32) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 14-ந்தேதி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
இப்பணியில் தொழிலாளர்களான கோவை காரமடை பகுதியை சேர்ந்த வடிவேலு (28), நாகராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோர் ஈடுபட்டனர். வடிவேலும், நாகராஜும் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தொட்டிக்கு மேல் பகுதியில் ராமகிருஷ்ணன் நின்று கொண்டிருந்தார். அப்போது கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியேறிய விஷவாயுவால் வடிவேலுக்கும், நாகராஜூக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன் தங்களை காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ராமகிருஷ்ணன் அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்தார். அப்போது சாயப்பட்டறை அலுவலகத்தில் இருந்த மேலாளர் தினேஷ்பாண்டி, எலக்ட்ரீசியன் ராஜேந்திரன் ஆகியோர் அங்கு ஓடி வந்தனர்.
தினேஷ்பாண்டி கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி நாகராஜை மீட்டு தொட்டியின் மேல் நிற்பவர்களிடம் கொடுத்தார். மேலும் தொட்டிக்குள் மயங்கி கிடந்த வடிவேலுவை மீட்க தொட்டியின் அடிப்பகுதிக்கு தினேஷ் பாண்டி சென்றார். அதன்பின்னர் அவர் மேலே வரவில்லை.
இதனால் வடிவேல், தினேஷ் பாண்டி மூச்சுதிணறல் ஏற்பட்டு இறந்தனர். ராஜேந்திரன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியில் ஈடுபடுத்துதல், அஜாக்கிரதையாக இருப்பது, உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தே செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சாயப்பட்டறை உரிமையாளர் தனலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்தநிலையில் 3 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்து விசாரணை நடத்த டெல்லியில் இருந்து தேசிய தூய்மை பணியாளர் ஆணைய அதிகாரிகள் திருப்பூருக்கு நாளை வருகின்றனர். இக்குழுவினர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் விசாரிக்க உள்ளனர். தொடர்ந்து ஆலையில் ஆய்வு நடத்த உள்ளனர்.
Next Story