search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை தண்ணீருடன் கழிவுநீர் கலந்திருப்பதை படத்தில் காணலாம்.
    X
    மழை தண்ணீருடன் கழிவுநீர் கலந்திருப்பதை படத்தில் காணலாம்.

    கே.கே.நகர், தி.நகரில் தேங்கி நிற்கும் மழை தண்ணீரில் கழிவுநீர் கலந்ததால் கடும் துர்நாற்றம்

    பெரும்பாலான இடங்களில் சாலையில் தேங்கி இருக்கும் மழைநீரில் சாக்கடை கலந்து இருப்பதால் கருப்பு நிறத்தில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதன் மூலமாக அந்த பகுதிகளில் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மீண்டும் வெள்ளம் தேங்கியுள்ளது.

    சென்னை மாநகரின் முக்கிய வணிகப்பகுதியான தி.நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் அதிகளவில் தேங்கியுள்ளது. அதே போன்று அருகில் உள்ள கே.கே.நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழைநீர் அதிகளவில் தேங்கி உள்ளது.

    இந்த தண்ணீர் வடிவதற்கு காலதாமதம் ஆகி வருவதால், தேங்கியுள்ள தண்ணீரில் துர்நாற்றம் வீசுகிறது.

    அதேநேரத்தில் சாக்கடை கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக தி.நகர் மற்றும் கே.கே.நகர் பகுதிகளில் பல தெருக்களில் மழை தண்ணீருடன் கழிவுநீர் கலந்துள்ளது. இதனால் மூக்கை துளைக்கும் வகையில் தி.நகர் மற்றும் கே.கே.நகர் பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது.

    மழைநீரில் கால் வைக்க முடியாத அளவுக்கு தண்ணீரும் சாக்கடை நீர் போன்று மாறிவிட்டது.

    தேங்கியுள்ள மழைநீர்

    பெரும்பாலான இடங்களில் சாலையில் தேங்கி இருக்கும் மழைநீரில் சாக்கடை கலந்து இருப்பதால் கருப்பு நிறத்தில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதன் மூலமாக அந்த பகுதிகளில் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    அதேநேரத்தில் நோய் பரவலை தடுக்கும் வகையில் சுகாதார பணியாளர்களும் தி.நகர் மற்றும் கே.கே.நகர் பகுதியில் களம் இறங்கி உள்ளனர். தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்கள் பரவுவதை தடுப்பதற்காக மருந்து தெளிக்கும் பணிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் உள்ள பொது மக்களிடம் தண்ணீரை காய்ச்சி குடிக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

    நோய் பரவலை தடுக்கும் வகையில் பொது மக்கள் தங்களது வீடுகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், மொட்டை மாடிகளில் கொசு உற்பத்தியை ஏற்படுத்தும் வகையில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.


    Next Story
    ×