search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    ராமநாதபுரத்தில் தொடர் மழையால் 3 வீடுகள் இடிந்தது

    ராமநாதபுரம் நகர் பகுதியில் பெய்த மழையால் கோட்டை மேடு, சூரன்கோட்டை, காட்டுப்பிள்ளையார் கோவில் தெரு உள்பட பல இடங்களில் தெருக்களில் மழை நீர் குளம் போல தேங்கிநின்றன.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 24-ந்தேதி முதல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மைய அறிவிப்பை தொடர்ந்து மாவட்டத்தில் 3-வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    மேலும் இன்று மாவட்டத்திற்கு ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பும் வெளியானது. ஆனால் நேற்றில் இருந்தே மாவட்டத்தில் மழை குறைந்து விட்டது. சராசரியாக 7.91 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    ராமநாதபுரம் சன்னதி தெருவில் ஜெயபிரகாஷ் என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதே போல நயினார்கோவில் சாலையில் உள்ள சூரன் கோட்டைக் காலனியில் மாரி என்பவரது வீட்டின் மேற்குப்புற சுவரும், மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள முகேஷ் கண்ணன் என்பவரது வீட்டின் பின்பக்க சுவரும் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் பாதிப்பில்லை.

    இதுகுறித்து தகவலறிந்த ராமநாதபுரம் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் நேரில் சென்று சேத விவரங்களை பார்வையிட்டார்.

    ராமநாதபுரம் நகர் பகுதியில் பெய்த மழையால் கோட்டை மேடு, சூரன்கோட்டை, காட்டுப்பிள்ளையார் கோவில் தெரு உள்பட பல இடங்களில் தெருக்களில் மழை நீர் குளம் போல தேங்கிநின்றன.

    ஆயுதப்படை மைதானத்தில் தண்ணீர் தேங்கியதால் போலீசார் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. பழைய பஸ் நிலையம், ரெயில் நிலைய பகுதிகளிலும் மழைநீர் தேங்கி உள்ளது.

    ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி உள்பட பல்வேறு இடங்களில் நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதியடைந்தனர். மாவட்டத்தில் சுமார் 40 கிலோ மீட்டருக்கு நெடுஞ்சாலைகள் சேதமடைந்திருப்பதாக நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சந்திரன் தெரிவித்தார்.

    மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,763 விவசாய கண்மாய்களில் 47 மட்டுமே முழுமையாக நிரம்பி உள்ளன. மேலும் 821 கண்மாய்கள் 25 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரையில் நிரம்பி உள்ளன.

    அதன்படி 741 கண்மாய்கள் மட்டும் 50 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரையிலும், 154 கண்மாய்கள் 25 சதவிகிதத்துக்கும் குறைவாகவும் நீர் நிரம்பி உள்ளன.

    மாவட்டத்தில் தற்போது வரை 944 ஹெக்டோ நெற்பயிர்கள் சேதமடைந்ததாக வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மி.மீ) விவரம் வருமாறு:-

    ராமநாதபுரம்- 2

    மண்டபம்- 7.80

    ராமேசுவரம்- 45.60

    பாம்பன்- 12.50

    தங்கச்சிமடம்- 13.60

    திருவாடானை- 8.80

    தொண்டி- 3.30

    வாலிநோக்கம்- 2.40

    மாவட்டத்தின் மொத்த மழை அளவு 126.60, சராசரி-7.91. இன்று காலை முதல் தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. பரமக்குடி, கமுதி ஆகிய பகுதிகளில் மழை பதிவு இல்லை.
    Next Story
    ×