search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலை நிறுத்தம் காரணமாக  பனியன் நிறுவனம் தொழிலாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி இருந்ததை படத்தில் காணலாம்.
    X
    வேலை நிறுத்தம் காரணமாக பனியன் நிறுவனம் தொழிலாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி இருந்ததை படத்தில் காணலாம்.

    நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்-ரூ.200கோடி வர்த்தகம் பாதிப்பு

    பின்னலாடை சரக்குகளை கொண்டு செல்லும் வாகனங்கள் இன்று இயக்கப்படவில்லை. பின்னலாடை துறையினரின் போராட்டத்தையொட்டி முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூரில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் உள்ளன. இதன்மூலம் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். 

    கொரோனா ஊரடங்கால் பின்னலாடை தொழில் பாதிக்கப்பட்டு, மீண்டு வந்த நிலையில், தற்போது பின்னலாடை உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது ஆடை உற்பத்தியாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    இதுவரை இல்லாத வகையில் கடந்த 1-ந்தேதி முதல் நூல் விலை கிலோவுக்கு ரூ.50 உயர்ந்தது ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு நெருக்கடியை அதிகரிக்க செய்துள்ளது. 

    எனவே  மத்திய-மாநில அரசுகள் நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும், பஞ்சு, நூல் ஏற்றுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்திய பருத்தி கழகம் வர்த்தகர்களுக்கு பஞ்சு விற்பனை செய்யக்கூடாது. பஞ்சு இறக்குமதி வரியை நீக்க வேண்டும். 

    தமிழக அரசு பருத்தி கொள்முதல் மையத்தை உருவாக்கி நூற்பாலைகளுக்கு சீரான விலைக்கு பஞ்சு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் இன்று  ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் மற்றும் பனியன் நிறுவனங்கள் சார்பில் வேலைநிறுத்தம், உண்ணாவிரத போராட்டம்  நடத்தப்படும் என பின்னலாடை துறை சார்ந்த அனைத்து சங்கங்கள், தொழிற்சங்கங்கள், அரசியல், வணிகர் சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி திருப்பூரில் இன்று பின்னலாடை நிறுவனங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனால் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும்  அனைத்து பின்னலாடை நிறுவனங்களும் மூடப்பட்டன. 

    இந்த போராட்டத்தில் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா), திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா), திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர் சங்கம், நூல் வியாபாரிகள் சங்கம், நிட்மா, டெக்பா, டிப், பவர்டேபிள் உரிமையாளர் சங்கம், காஜா பட்டன், செக்கிங் அயர்னிங் சங்கம், ரைசிங், காம்பாக்டிங், வர்த்தகர் சங்கம்,பையிங் சங்கம், எம்ப்ராய்டரி, எலா ஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம், பாலிபேக் உற்பத்தியாளர் சங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு, அட்டைபெட்டி உற்பத்தியாளர் சங்கம், விசைத்தறி ஜவுளி உற்பத்தி யாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் பங்கேற்றன.
     
    மேலும் நூல் விலையை கட்டுப்படுத்த கோரி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று காலை 9.30 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. 

    இதில் பின்னலாடை உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் அ.தி.மு.க., மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், பா.ம.க., எஸ்.டி.பி.ஐ., கொங்கு நாடு விவசாயிகள் கட்சி, மஜித் சேவை குழு, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கொங்கு நாடு முன்னேற்ற கழகம், மனித நேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி.எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., - அண்ணா தொழிற் சங்கம், பி.எம்.எஸ்., - ஏ.ஐ.டி.யு.சி., சங்கங்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்க பிரதிநிதிகள் பங் கேற்றனர். 

    பின்னலாடை சரக்குகளை கொண்டு செல்லும் வாகனங்கள் இன்று இயக்கப்படவில்லை. பின்னலாடை துறையினரின் போராட்டத்தையொட்டி முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.  

    போராட்டம் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் ரூ.200 கோடி அளவுக்கு பின்னலாடை வர்த்தகம் பாதிக்கப்பட்டது. ‘டீமா’ சங்க தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், 

    திருப்பூர் பின்னலாடை துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தற்போது நூல் விலை உயர்ந்துள்ளது. இம்மாதம் மட்டும் கிலோவுக்கு ரூ.50 அதிகரித்துள்ளது. அந்த வகையில் 100 கிலோ கொண்ட ஒரு கேஸ்க்கு ரூ.5ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளது.

    பஞ்சு, நூல் விலையை கட்டுப்படுத்தி பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக உள்ள பின்னலாடை துறையை பாதுகாப்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மத்திய அரசு பஞ்சு நூல் ஏற்றுமதியை கட்டுப்படுத்தி உள்நாட்டு ஆடை உற்பத்தி துறையை பாதுகாக்க வேண்டும் என்றார். 
    Next Story
    ×