search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி பிரைன்ட்நகர் பகுதியில் வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம்
    X
    தூத்துக்குடி பிரைன்ட்நகர் பகுதியில் வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம்

    தமிழகம் முழுவதும் விடிய விடிய மழை: கிராமங்கள் துண்டிப்பு- போக்குவரத்து நிறுத்தம்

    நாகை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை அதிகளவில் பெய்து வருவதால் சாமந்தான்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்தது. 340 வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
    சென்னை:

    வங்க கடலில் அடுத்தடுத்து ஏற்பட்ட 2 காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வெள்ளக்காடாக மாறியது. இதனால் பல இடங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன.

    கடந்த ஒன்றிரண்டு நாட்களாக மழை சற்று ஓய்ந்து இருந்தது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் மேக கூட்டங்கள் திரண்டு மேலடுக்கு சுழற்சி நிலவியது. இது தென்மேற்கு நோக்கி நகர்ந்தது.

    இதனால் நேற்று அதிகாலை முதல் தமிழ்நாட்டில் பல இடங்களிலும் கனமழை கொட்ட தொடங்கியது.

    இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகாலை தொடங்கி மதியம் வரை இடைவிடாது கனமழை பெய்தது. எனவே மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் 20 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்தது.

    அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 30 சென்டி மீட்டர் மழை பெய்தது.

    இதே போல கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

    கனமழை காரணமாக 27 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    தூத்துக்குடியில் பெய்த மழையால் மாநகராட்சி பகுதியில் உள்ள தனசேகரன் நகர், பாலா நகர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று வீடுகளுக்குள் முட்டளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்குள்ள 2,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காலையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    பிரையன்ட் நகரில் உள்ள 10 தெருக்களிலும், போல்டன்புரத்தில் 4 தெருக்களிலும் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் சென்றது. அமுதா நகர்,  சிதம்பர நகர், ராஜீவ் நகர், பாரதி நகர், முனியசாமி புரம், ராஜகோபால் நகர், அண்ணா நகர், நிகிலேசன் நகர், சி.என்.டி. காலனி, லூர்தம்மாள்புரம், செயின்ட் மேரீஸ் காலனி, ஆரோக்கியபுரம், டூவிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இதனால் விடிய, விடிய அவர்கள் கண் விழித்து தூங்க முடியாமல் தவித்தனர். அவர்கள் வேலைகளுக்கும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்ல முடியாமலும் அவதிப்பட்டனர்.

    காயல்பட்டினத்தில் இடியுடன் பெய்த கனமழை காரணமாக பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக சுலைமான் நகர், பார்க்கர் காலனி, உச்சினிமாகாளி அம்மன் கோவில் தெரு, காட்டுதைக்கா தெரு, அருணாசலபுரம், கொம்புதுரை உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்தது.

    தொடர்ந்து கொம்புதுரை பகுதியில் வசித்து வந்த மீனவர்கள் அங்கிருந்து பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். காயல்பட்டினம் பஸ் நிலையம், பொது நூலகம், கால்நடை மருத்துவமனை, சார்பதிவாளர் அலுவலகத்தையும் வெள்ள நீர் சூழ்ந்தது.

    சாத்தான்குளம் அருகே உள்ள அச்சம்பாடு கிராமத்தில் வெள்ள நீர் சூழ்ந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் வீட்டில் இருந்த பொருட்களை போட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறி சென்றனர்.

    கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக புங்கவர்நத்தம் கிராமத்தில் உள்ள கன்மாய் நிரம்பி மழைநீர் ஊருக்குள் புகுந்ததால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. விளாத்திகுளம், எட்டயபுரம், கழுகுமலை, கயத்தாறு, கடம்பூர் உள்ளிட்ட பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது.

    புங்கவர்நத்தம் கிராமத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார் கோவில் அருகே உள்ள கண்மாய் முற்றிலும் நிரம்பி தண்ணீர் ஊருக்குள் புகுந்துள்ளது. இதனால் அனைத்து தெருக்களிலும் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர்.

    தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் மழை நீர் முட்டளவு தேங்கி நிற்பதால் நோயாளிகளை பார்க்க உறவினர்கள்  செல்ல முடியாமல் தவித்தனர். இன்று காலை பணிக்கு சென்ற டாக்டர்கள், நர்ஸ்கள் இருசக்கர வாகனங்களில் சென்ற போது தண்ணீரில் மூழ்கி மோட்டார் சைக்கிள்கள் பழுதானது.

    கனமழை காரணமாக தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் நேற்று மாலை 5  மணிக்கு செல்ல வேண்டிய மைசூர் எக்ஸ்பிரஸ் நள்ளிரவு 12 மணிக்கும், இரவு 8 மணிக்கு செல்ல வேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 3.20 மணிக்கும் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    சென்னையில் இருந்து இன்று காலை வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் வழக்கமாக கீழுர் ரெயில் நிலையத்தில் நிற்கும். ஆனால் இன்று  மழை காரணமாக 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேலூர் ரெயில் நிலையத்தில் பயணிகளை இறக்கியது.

    திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது. கோவில்  கிழக்கு பகுதியில் உள்ள கிரி பிரகாரத்தில் மழை நீர் முழங்கால் அளவு தேங்கியது. பின்னர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கோவிலில் தேங்கிய மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டது.

    ஆனால் சுவாமி மூலவர் இருக்கும் மகா மண்டபத்திற்குள் தண்ணீர் செல்லவில்லை. கோவில் நாழிகிணறு நிறுத்தத்தில் இருந்து கார்  செல்ல முடியாத அளவு மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. எனினும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த மழையால் 12 மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. ஏற்கனவே பெய்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்போது மீண்டும் அதிக மழை பெய்ததால் ஆறு, ஓடைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே ஆற்றோரம் வசிக்கும் மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் மழை பெய்ய தொடங்கியது.

    முதலில் சாரல் மழையாக தொடங்கி இரவில் பலத்த மழையாக மாறியது. குன்னூர், அருவங்காடு, பர்லியார், ஓட்டுப்பட்டரை, வண்டிச்சோலை உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது.

    இரவில் தொடங்கி நள்ளிரவு வரை பெய்த மழையால் குன்னூர் மார்க்கெட் சாலை, பஸ் நிலைய சாலை, வண்டிச்சோலை சாலை, அருவங்காடு உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளிலும் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. 

    தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    இதேபோல் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் கனமழை பெய்தது. இந்த மழையால் சேரிங்கிராஸ், கலெக்டர் அலுவலக சாலை, ரோஜா பூங்கா சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர் மழை காரணமாக ஊட்டி பஸ் நிலையம் செல்லும் உட்லண்ட்ஸ் சாலையில் நின்றிருந்த ராட்சத மரம் முறிந்து சாலையில் விழுந்தது.

    திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் நேற்று காலை முதல் மழை பெய்ய தொடங்கியது. இன்றும் அங்கு பலத்த மழை பெய்தது.

    நேற்றைய தினம் பெய்த மழையில் அதிகபட்சமாக திருச்சி மாநகரில் திருச்சி டவுன், திருச்சி ஜங்சன், ஏர்போர்ட் மற்றும் பொன்மலை பகுதிகளில் 206.5 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் மாநகரில் எங்கு பார்த்தாலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய வண்ணம் உள்ளது. மீண்டும் கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது.

    திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா பச்சமலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் துறையூரில் உள்ள 285 ஏக்கர் பெரிய ஏரி நள்ளிரவில் நிரம்பி கடை நீர் வழிந்தது.

    உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பச்சைமலையில் பலத்த மழை காரணமாக நேற்றிரவு உப்பிலியபுரத்திலிருந்து சோபனபுரம் வழியாக டாப் செங்காட்டுப்பட்டி செல்லும் வனத்துறையினருக்கு சொந்தமான பிரதான சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    இதனால் சோபனபுரத்திலிருந்து டாப் செங்காட்டுப்பட்டி செல்லும் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. துறையூர் வனச்சரகர் பொன்னுசாமி தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். சோபனபுரத்திலிருந்து டாப் செங்காட்டுப்பட்டி செல்லும் 14 கி.மீ. சாலை மிகவும் சேதமடைந்துள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை, ஆலங்குடி, திருமயம், கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம்,  மீமிசல், ஆவுடையார்கோவில், விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய பலத்த மழை இன்றும் தொடர்கிறது.

    மழை நீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

    ஆலங்குடி அருகே உள்ள குளமங்கலம் தெற்கு ஊராட்சியில் செல்லத்துரையின் வீட்டின் ஒரு பகுதி முழுவதுமாக சேதமடைந்து இடிந்தது. இதனால் தங்குவதற்கும், உணவிற்கும் கூட வழியில்லாத நிலைக்கு தம்பதியினர் தள்ளப்பட்டுள்ளனர்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பெரம்பலூர் வட்டம் லாடபுரம் கிராமத்தில் பொக்கினி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து ஊருக்குள் நீர் புகுந்தது.

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம், செந்துறை, ஜெயங்கொண்டம், தா.பழூர், திருமானூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருகிறது.

    கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மழை விட்டு விட்டு பெய்துவந்தது. அவ்வப்போது வெயிலும் அடித்தது.

    இந்த நிலையில் மாலை 5 மணி அளவில் பலத்த மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு இரவு முழுவதும் பெய்தது.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, வடலூர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து சற்று ஓய்ந்திருந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது.

    வேடப்பட்டி, பாரதிபுரம், நத்தம் சாலையில் உள்ள அண்ணா காலனி ஆகிய பகுதிகளில் கழிவுநீருடன் மழை நீரும் சேர்ந்து ஓடியது. 

    பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் மழை நீர் குடியிருப்புகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

    இரவு வரை மழை தொடர்ந்து பெய்ததால் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் தூக்கமின்றி கைக்குழந்தைகளுடன் அவதி அடைந்தனர்.

    பழனியில் தொடர்ந்து 5 மணி நேரம் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. வரதமாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து 670 கனஅடி தண்ணீரும், பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து 705 கன அடி தண்ணீரும் சண்முகநதி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

    கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, தடியன்குடிசை, மங்களம்கொம்பு, கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர் பகுதியில் மாலை 3 மணியில் இருந்து விடிய, விடிய இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது சூறாவளி காற்றும் வீசியது. இதனால் பெரும்பாறை, சித்தரேவு மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் மின் வயர் அறுந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    நேற்று மாலை முதல் சேலம் மாவட்டத்தில் மழை பெய்ய தொடங்கியது. சில இடங்களில் கனமழை கொட்டியது. பரவலாக பெய்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கின. சேலம் உள்ளிட்ட சில பகுதிகளில் இரவு முழுவதும் மழை தூறிக்கொண்டே இருந்தது.

    ஏற்கனவே பெய்த மழையினால் மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மற்ற அணைகளான புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை, கரியகோவில் அணைகளும் நிரம்பின. இதனால் அந்த அணைகளில் இருந்தும் உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    தஞ்சை அருகே திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், மெலட்டூர், திருகருக்காவூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று மதியம் முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

    இன்று காலை வரை விடாது மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்தது. இதனால் போக்குவரத்தும், மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

    நாகை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை அதிகளவில் பெய்து வருவதால் சாமந்தான்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்தது. 340 வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. 100க்கும் மேற்பட்ட வீடுகளில் இடுப்புவரை தண்ணீர் புகுந்ததால் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    மன்னார்குடி அருகே பாரதி மூலங்குடி என்ற பகுதியில் நேற்று காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அப்பகுதியில் வாய்கால் ஓரம் சென்ற உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. கனமழை பெய்து வந்ததால் காலை வரை அப்பகுதிக்கு யாரும் செல்லாததால் உயிரிழப்பு தடுக்கப்பட்டது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முதல் மீண்டும் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சம்பா-தாளடி விளை நிலங்கள் மீண்டும் மழைநீரில் மூழ்கி வருகின்றன.

    மதுரையில் நேற்று மாலை முதல் இரவு வரை சுமார் 6 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மதுரை சாலைகளில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியது. எனவே முழுவதிலும் வாகனங்கள் சீராக செல்ல முடியாமல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    வைகை அணை நீர்மட்டம் 69.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4435 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 5915 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதனால் 5 மாவட்ட கரையோர பகுதி மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக இடைவிடாது தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழையாக பெய்து வருகிறது.

    விழுப்புரம் மாவட்டத்தில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைவெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

    புதுவையில் நேற்று மதியம் முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மழை நீடித்தது.

    இதே போல் புதுவை புறநகர் பகுதிகளான பாகூர், காலாப்பட்டு, மதகடிப்பட்டு, திருபுவனை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. மழை காரணமாக புதுவையில் இன்றும், நாளையும் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் காரைக்காலிலும் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே வானிலை இலாகா வெளியிட்டுள்ள செய்தியில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திருச்சி, கரூர், நாமக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட 17 மாவட்டங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது.

    இதில் 12 இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.


    Next Story
    ×