search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்காளி
    X
    தக்காளி

    உழவர் சந்தையில் ஒரு நபருக்கு 5 கிலோ தக்காளி மட்டுமே விற்பனை

    தக்காளி தட்டுப்பாடு காரணமாக நுகர்வோர் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக உழவர் சந்தை உள்ளிட்ட காய்கறி அங்காடிகளில் ஒரு நபருக்கு 2 கிலோ முதல் 5 கிலோ வரை தக்காளி விற்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் மொத்த காய்கறி மார்க்கெட், அண்ணா மார்க்கெட், டி.கே. மார்க்கெட் மற்றும் ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், சாய்பாபா காலனி உள்பட பல இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டுகள் மற்றும் சந்தைகளுக்கு தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, நாச்சிபாளையம், காரமடை, பெரியநாயக்கன் பாளையம், அன்னூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தக்காளிகள் அதிகளவில் விற்பனைக்கு வரும். இதுதவிர கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்தும் தக்காளிகள் விற்பனைக்கு வருவது வழக்கம்.

    கடந்த சில வாரங்களாக கோவையில் கொட்டி தீர்த்த வடகிழக்கு பருவமழையால் தக்காளி செடிகள் அனைத்தும் செடியிலேயே கருகி அழுகி விட்டன. இதனால் மார்க்கெட்டுகளுக்கு வரும் தக்காளி வரத்து வெகுவாக குறைந்தது. வரத்து குறைவு காரணமாக சிலநாட்களாக தக்காளி விலையும் கிடுகிடுவென உயர்ந்து ரூ.100 முதல் ரூ.120-யையும் தாண்டி விற்பனையானது.

    இதனால் தக்காளி வாங்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். சில ஓட்டல்களிலும் குறைவான அளவிலேயே தக்காளிகள் சமையலுக்கு பயன்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து தக்காளி விலை ஏறுமுகமாக இருந்ததால் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு, கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளிலும் தக்காளி மற்றும் காய்கறிகள் குறைந்த விலைக்கு விற்க ஏற்பாடு செய்தது.

    அதன்படி கோவையில் சிந்தாமணி தலைமை அலுவலகம், கோவை மாவட்ட நூலக ஆணைக்குழு கட்டிட வளாகம், பூ மார்க்கெட் ஆவின் பால் விற்பனை அலுவலகம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தக்காளி மற்றும் காய்கறிகள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டன. இதனால் கூட்டுறவு அங்காடிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    நேற்று கோவை டி.கே.மார்க்கெட்டில் ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.100-க்கும், ஆப்பிள் தக்காளி ரூ.120-க்கும் விற்பனையானது. இன்று காலை நாட்டு தக்காளி கிலோவுக்கு ரூ.10 குறைந்து, ரூ.90க்கும், ஆப்பிள் தக்காளி ரூ.20 குறைந்து, ரூ.100க்கும் விற்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினத்தை விட இன்று தக்காளி விலை சற்று குறைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து டி.கே.மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறுகையில், பருவமழை காரணமாக தக்காளி வரத்து வெகுவாக குறைந்து விட்டது. இதன் காரணமாக தக்காளி விலையும் மக்கள் யாரும் எதிர் பாராத விலை உச்சத்தை தொட்டு விட்டது. தற்போது நாட்டு தக்காளியை ரூ.90-க்கும், ஆப்பிள் தக்காளியை ரூ.100-க்கும் விற்பனை செய்து வருகிறோம். இன்னும் ஒரு வார காலத்திற்கு இதே விலை தான் நீடிக்கும். தக்காளி வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது என்றார்.

    கோவையில் உள்ள உழவர் சந்தைகளில் நேற்று நாடு மற்றும் ஆப்பிள் தக்காளி கிலோ ரூ.70 முதல் ரூ.74 வரைக்கும் விற்பனையானது. இன்று நாடு மற்றும் ஆப்பிள் தக்காளி குறைந்தபட்சமாக ரூ.75க்கும், அதிகபட்சமாக ரூ.80க்கும் விற்பனையாகி வருகிறது. இதற்கிடையே உழவர் சந்தை உள்ளிட்ட காய்கறி அங்காடிகளில் ஒரு நபருக்கு 2 கிலோ தக்காளி மட்டுமே வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து உழவர் சந்தை வியாபாரிகள் கூறுகையில், மழையால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இருப்பினும் தக்காளி தட்டுப்பாடு காரணமாக நுகர்வோர் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக உழவர் சந்தை உள்ளிட்ட காய்கறி அங்காடிகளில் ஒரு நபருக்கு 2 கிலோ முதல் 5 கிலோ வரை தக்காளி விற்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதிகாரிகள் அறிவுறுத்தல்படியே நாங்கள் தக்காளியை விற்று வருகிறோம். 5 கிலோவுக்கு மேலோ அல்லது மொத்தமாகவோ விற்பது கிடையாது என்றனர்.
    Next Story
    ×