search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனமழை பெய்ததால் வண்ணார்பேட்டை சாலையில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்ற வாகனங்கள்
    X
    கனமழை பெய்ததால் வண்ணார்பேட்டை சாலையில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்ற வாகனங்கள்

    கனமழை எதிரொலி- நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

    கனமழையையொட்டி நாளை முதல் நெல்லை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.
    நெல்லை:

    தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக உள்ளதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று மாலை முதல் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.

    இந்நிலையில் இன்று அதிகாலை முதலே நெல்லை மாவட்டம் முழுவதுமே வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசி வந்தது. பின்னர் 7 மணி முதல் மாநகர பகுதிகளில் சாரல் மழை பெய்யத்தொடங்கியது.

    தொடர்ந்து காலை 10 மணிக்கு நெல்லை, பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் கனமழை பெய்யத் தொடங்கியது.

    இதே போல் முக்கூடல், சேரன்மகாதேவி, வி.கே.புரம், களக்காடு, நாங்குநேரி, அம்பை, திசையன்விளை உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டியது.

    இந்த மழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. பிற்பகலுக்கு பின்னர் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்தது.

    இதனால் இன்று காலை சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டவாறு சென்றது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

    நெல்லை எஸ்.என். ஹைரோடு, டவுன், பேட்டை, பாளையங்கோட்டை, வண்ணார்பேட்டை, மார்க்கெட் பகுதி உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் தேங்கிய தண்ணீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

    நெல்லை மாவட்டத்தில் இன்று பெய்து வரும் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர தொடங்கி உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை திருச்செந்தூர், ஆறுமுகநேரி, நாசரேத், கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

    ஆறுமுகநேரி உள்ளிட்ட சில இடங்களில் பலத்த இடியுடன் மழை பெய்தது. இதனால் பெரும்பாலான இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் விடுமுறை விடப்படவில்லை.

    இதனால் இன்று காலை பள்ளி, கல்லூரி சென்ற மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தவாறு சென்றனர்.

    கனமழையையொட்டி நாளை முதல் நெல்லை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

    ஆனால் இன்று கூத்தங்குழி, கூடுதாழை உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களை 8 ஆயிரம் மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    இதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் வைப்பாறு, வேம்பாறு, தருவைகுளம், புன்னைக்காயல், பெரிய தாழை, மணப்பாடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 12 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்களும் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    இதனால் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு இருந்தது.

    Next Story
    ×