search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி
    X
    ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு புதிய வியூகம்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் இன்று அவசர ஆலோசனை

    சசிகலா விவகாரம் அ.தி.மு.க.வில் விவாதப் பொருளாக மாறி உள்ள நிலையில் அதுபற்றி இன்றைய கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
    சென்னை:

    அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது தலைமையில் இன்று கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணியளவில் முதலில் வந்தார். அவரை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.

    இருவரையும் வாழ்த்தி தொண்டர்கள் கோ‌ஷமிட்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட அனைவரும் வருகை தந்திருந்தனர்.

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவிய பிறகு சசிகலா தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். பல்வேறு மாவட்டங்களில் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளை அவர் போனில் தொடர்பு கொண்டும் பேசினார்.

    இது அ.தி.மு.க. வட்டாரத்திலும், அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதன்பிறகு அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டத்தின் போது சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்கிற பெயர் பொறித்த கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

    பொதுச்செயலாளர் என்ற பெயரில் தொடர்ந்து அவர் அறிக்கைகளையும் விட்டுவருகிறார். அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் அதிருப்தியாளர்களிடம் போனிலும் தொடர்ந்து பேசி வருகிறார்.

    தி.நகரில் உள்ள வீட்டில் பலரும் சசிகலாவை சந்தித்தும் வருகிறார்கள். சசிகலாவுடன் இதுபோன்று தொடர்பில் இருந்தவர்கள் மீது அ.தி.மு.க. தலைமை நடவடிக்கையும் எடுத்துள்ளது.

    சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் அறிக்கை விடுவதுடன், கொடியையும் பயன்படுத்தி வருகிறார். இதுதொடர்பாக அ.தி.மு.க. சார்பில் போலீஸ் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் சசிகலா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தனர்.

    சசிகலாவுக்கு எதிராக அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் கருத்து தெரிவித்துவரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்ப்பது பற்றி நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்று அவர் கூறிய கருத்துக்கள் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இதற்கு அ.தி.மு.க.வில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் எழுந்தன.

    சசிகலா

    இப்படி சசிகலா விவகாரம் அ.தி.மு.க.வில் விவாதப் பொருளாக மாறி உள்ள நிலையில் அதுபற்றி இன்றைய கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    இன்று கூட்டம் நிறைவு பெற்ற பிறகு இதுதொடர்பான விரிவான தகவல்களை கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. தோல்வியை தழுவியது. இந்த நிலையில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் இன்றைய கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படுகிறது.

    தங்களது பகுதியில் செல்வாக்கு உள்ள நபர்கள் யார், யார் என்பது பற்றிய தகவல்களை மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகளிடம் கட்சி தலைமை கேட்டுள்ளது. அதுபோன்ற நபர்களை தேர்தலில் நிறுத்தி எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டுள்ளது. மேலும் இதுபோன்ற பல புதிய வியூகங்கள் இன்றைய கூட்டத்தில் வகுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.



    Next Story
    ×