search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் மாவட்டத்தில் சேதமடைந்த தடுப்பணைகளால் வீணாகும் மழைநீர்

    ஆண்டிபாளையம் குளத்துக்கு தண்ணீர் வழங்கும் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது.
    திருப்பூர்:

    கோவை - திருப்பூர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் குளம், குட்டைகள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக நொய்யல் தண்ணீரால் பயன்பெறும் குளங்கள் கடல் போல் நிரம்பியுள்ளன. 

    ஆண்டிபாளையம் குளத்துக்கு தண்ணீர் வழங்கும் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. நொய்யல் ஆற்றின் குறுக்கே 300 மீட்டர் நீளத்தில் உள்ள அணைக்கட்டின் மையத்தில் நல்லம்மன் கோவில் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, மிக நீளமான நொய்யல் தடுப்பணை என்ற அந்தஸ்தை பெற்ற  நல்லம்மன் தடுப்பணை தற்போது தூய்மையான மழைநீரால் நிரம்பியுள்ளது. பெரிய பாறைகளுக்கு மத்தியில் உபரிநீர் வழிந்தோடி வெள்ளியை உருக்கி வார்ப்பது போல் காட்சியளிப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு குளங்களும் நிரம்பியுள்ளதால் உபரியாக வரும் மழைநீர் நேரடியாக நொய்யலில் பாய்ந்தோடுகிறது. 

    அவிநாசியில், கடந்த மாதம் துவங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கிராமப்புறங்களில் உள்ள குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பியது. கடந்த 10 நாளுக்கு முன் அவிநாசி அருகே செம்மாண்டம்பாளையம் தடுப்பணை நிரம்பி வழிந்த நிலையில் அடுத்த சில நாட்களில் மழைப்பொழிவு இல்லாத நிலையில் தண்ணீரின் அளவு குறையத்துவங்கியது.

    அவிநாசியில் சராசரி மழைப்பொழிவு குறைவு என்ற நிலையில் குளம், குட்டைகளில் நிரம்பும் தண்ணீர் வெகுவிரைவில் நிலத்தடியில் உறிஞ்சப்படுவது தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

    அவிநாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தத்தனூர் ஊராட்சி, ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ளது. அவிநாசி ஒன்றியம் மற்றும் நகர அளவில் எங்குமில்லாத வகையில், தத்தனூர் ஊராட்சிப் பகுதியில் மழை பெய்தது.

    பெருமழையால் சாவக்கட்டுப்பாளையம், வெள்ளமடை, கள்ளிப்பாளையம், ஆவாரங்காடு, பெருமாள் கோவில் மேடு உள்ளிட்ட இடங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. 

    நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்ததால் தண்ணீர் ஊற்றெடுக்கிறது. குளம், குட்டை மற்றும் ஊற்றில் இருந்து வெளியேறும் தண்ணீர், ஈரோடு மாவட்ட எல்லையில் 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொளத்துப்பாளையம் குளத்தில் நிரம்ப துவங்கியிருக்கிறது. இதனால் ஈரோடு மாவட்டத்துக்கான நிலத்தடி நீர்மட்டம் உயரும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

    அவிநாசி சேவூர் அருகே சின்னகானூர் குளம். வண்ணாங்குட்டை ஆகியவை சமீபத்தில் பெய்த மழையில் நிரம்பின. கானூகுளத்துக்கு ஆறு ராஜவாய்க்கால் வழியாக தண்ணீர் வரும். சமீபத்திய மழையில் அனைத்து வாய்க்கால் வழியாகவும் தண்ணீர் வரத்துவங்கியதால் குளம், குட்டை வேகமாக நிரம்புகிறது.

    கானூர் குளம் பாதுகாப்பு சங்கத்தினர் கூறுகையில்:

    நீண்ட இடைவெளிக்கு பின் சமீபத்தில் பெய்த மழையில் தான், கானூர் குளம் நிரம்பியுள்ளது. இதனால் கானூர் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் என்றனர்.
    குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளே தண்ணீர் தேவைக்கு ஆதாரமாக உள்ளன. 

    பல்வேறு கிராமங்களை கடந்து வரும் நீர் ஓடைகள், மழைநீரை குளம் குட்டைகளில் கொண்டுவந்து சேர்க்கின்றன. அவ்வாறு வரும் மழைநீரை சேமித்து வைத்து பயன்படுத்தவும், அளவுக்கு அதிகமான நீரை வெளியேற்றவும் தடுப்பணைகள் உதவுகின்றன.

    ஆனால், சேதமடைந்த தடுப்பணைகள் சீரமைக்கப்படாததால் தண்ணீர் சேமிப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது. விவசாயிகள் கூறுகையில், பருவ மழைகளின்போது வரும் தண்ணீரை தடுப்பணைகள் மூலம் சேகரித்து வைப்பதால், கோடை காலம் முடியும் வரை தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது.

    சமீப காலமாக ஆக்கிரமிப்புகள் மற்றும் பராமரிப்பு இன்மை காரணமாக, ஓடைகள் வழியாக மழை நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. அதையும் மீறி தண்ணீர் வந்தால்  சேதமடைந்த தடுப்பணைகளால் மழைநீரை சேமிக்க இயலாத நிலை ஏற்படுகிறது. தடுப்பணைகள் மூலம் சேகரமாகும் தண்ணீர் சுற்றுவட்டார பகுதிக்கு நீர் ஆதாரமாகிறது. 

    கடந்த சில தினங்களாக பெய்த மழையில் குளம், குட்டைகள் ஓரளவு நிரம்பியுள்ளன. எதிர்வரும் நாட்களில் மழை பெய்தால் நீர் நிலைகள் நிரம்பும். தடுப்பணைகள் உறுதியுடன் இருந்தால் மட்டுமே தண்ணீரை சேமித்து வைத்து கோடை காலத்தில் பயன்படுத்த முடியும். நீர் ஓடைகளை தூர்வாரவும், தடுப்பணைகளின் தரத்தை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    Next Story
    ×