search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் தெற்குவீதியில் அச்சு அகல் விளக்குகள் விற்பனை நடைபெற்றதை காணலாம்
    X
    திருவாரூர் தெற்குவீதியில் அச்சு அகல் விளக்குகள் விற்பனை நடைபெற்றதை காணலாம்

    திருவாரூரில் அச்சு அகல் விளக்குகள் விற்பனை மும்முரம்

    கார்த்திகை தீப திருநாளையொட்டி திருவாரூரில் அச்சு அகல் விளக்குகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    திருவாரூர்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகை கார்த்திகை தீப திருநாளாகும். தீப திருநாளில் அகல் விளக்குகள் முக்கிய இடத்தை பிடிக்கிறது. காலங்கள் மாறினாலும் களி மண்ணினால் ஆன அகல் விளக்குக்கு என்றுமே தனி சிறப்பு உண்டு. கோவில்களில் அகல் தீபங்கள் ஏற்றுவது ஐதீகம். இன்று(வெள்ளிக்கிழமை) கார்த்திகை திருவிழா நடைபெறுகிறது. திருவாரூர் கிடாரங்கொண்டான், திருக்காரவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மண்பாண்டங்கள் உற்பத்தி செய்யும் தொழிலாளர்களின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    தீப திருவிழாவிற்காக ஒவ்வொரு குடும்பமும் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட களிமண்ணில் அகல் விளக்குகள் உற்பத்தி செய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தொடர் கன மழை பெய்து வருவதால் அகல் விளக்குகள் தயாரிப்பு பணிகள் முடங்கியது. இதனால் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    களிமண் அகல் விளக்குகள் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் அச்சு விளக்குகள் வருகை அதிகரித்துள்ளது. இதில் 5 சிறிய அகல் விளக்குகள் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் பெரும்பாலான விளக்குகள் விருத்தாசலம் பகுதியில் உற்பத்தியாகி விற்பனைக்கு வந்துள்ளது. அச்சு விளக்குகள் மிககுறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் களிமண் அகல்விளக்குகள் விற்பதில் மிகுந்த போட்டியாக இருந்து வருகிறது.

    இதுகுறித்து மண்டபாண்ட தொழிலாளர்கள் கூறுகையில்,

    களிமண் அகல் விளக்குகள் உற்பத்தியில் மண் எடுப்பதில் அனுமதி கிடைப்பதில் சிரமங்கள் உள்ளன. மேலும் மணலுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. தொடர் மழையால் அகல் விளக்குகள் உற்பத்தி முடங்கியது.

    அச்சு மூலம் பல வடிவங்களில் தயாரிக்கப்படும் விளக்குகள், நாங்கள் தயாரிக்கும் களிமண் விளக்குகளை விட மிக குறைவான விலையில் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் நலிவடைந்து வருகிறது. எனவே களிமண், மணல் எளிதாக கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்தால் தான், வருங்காலத்தில் மண்பாண்டங்களை உற்பத்தி செய்ய முடியும். மேலும் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×