search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப்பெரியாறு அணை
    X
    முல்லைப்பெரியாறு அணை

    பெரியாறு அணையின் நீர்மட்டம் மீண்டும் சரிவு

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு உபரிநீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் 141 அடிக்கு கீழ் சரிந்துள்ளது.
    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை தேக்கிக்கொள்ள தமிழகத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி கடந்த மாதம் 29-ந் தேதி அணையின் நீர் மட்டம் 139 அடியை நெருங்கியபோது, ‘ரூல் கர்வ்’ நடைமுறைப்படி அணையில் இருந்து தண்ணீர் கேரளாவுக்கு உபரியாக வெளியேற்றப்பட்டது.

    சுமார் 9 நாட்கள் வீணாக தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வந்த போதிலும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது எதற்காக? என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியபோதுதான் ‘ரூல் கர்வ்’ நடைமுறை கடைபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இதன் பின் நேற்று 141 அடியை நீர்மட்டம் எட்டியவுடன் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் பெரியாறு அணையில் இருந்து கேரள பகுதிக்கு 2 மற்றும் 3-வது ‌ஷட்டர்கள் வழியாக 772 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

    பின்னர் மாலையில் இது அதிகரிக்கப்பட்டு மேலும் 2 ‌ஷட்டர்கள் திறக்கப்பட்டு 1554 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் இன்று காலை 140.80 அடியாக சரிந்தது.

    பெரியாறு அணைக்கு வினாடிக்கு 2790 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 2300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதில் 1800 கன அடி மின் உற்பத்திக்கும், 500 கன அடி இரைச்சல் பாலம் வழியாகவும் திறக்கப்பட்டுள்ளது. நீர் மட்டம் சரிந்ததால் கேரளாவுக்கு திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டது. நீர் இருப்பு 7342 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர் மட்டம் 69.42 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4522 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து நேற்று 4420 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 3834 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5681 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு மற்றும் சோத்துப்பாறை அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    Next Story
    ×