search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மலிவு விலை சிமெண்ட் விற்பனையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
    X
    மலிவு விலை சிமெண்ட் விற்பனையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    ‘வலிமை சிமெண்ட்’ விற்பனையை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

    புதிய ரக “வலிமை” சிமெண்ட் அதிக உறுதியும், விரைவாக உலரும் தன்மையும், அதிக வெப்பத்தை தாங்கும் தன்மையும் கொண்டது.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் உயர்தர ரக சிமெண்ட் “வலிமை”யை அறிமுகப்படுத்தி, விற்பனையை துவக்கி வைத்தார்.

    தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் ஆலங்குளம் சிமெண்ட் ஆலை, ஆண்டொன்றுக்கு 2 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி திறனுடன், அப்போதைய முதல்-அமைச்சர் கலைஞரால் 1970-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

    தொடர்ந்து, தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தால், அரியலூரில் ஆண்டொன்றுக்கு 5 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி திறனுடன் ஒரு ஆலையும், 10 லட்சம் மெட்ரிக் டன் திறன் கொண்ட மற்றொரு புதிய சிமெண்ட் ஆலையும் நிறுவப்பட்டது.

    இந்த மூன்று ஆலைகளின் மொத்த உற்பத்தித்திறன் ஆண்டொன்றுக்கு 17 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகம் “அரசு” என்ற பெயரில் சிமெண்டை விற்பனை செய்து வருகிறது.

    2021-22-ம் ஆண்டு தொழில் துறை மானியக்கோரிக்கையின்போது, “வலிமை” என்ற பெயரில் ஒரு புதிய ரக சிமெண்ட் அறிமுகப்படுத்தப்படும் என்று தொழில் துறை அமைச்சர் ஓர் அறிவிப்பினை வெளியிட்டார்.

    அதன்படி, தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் உயர்தர “வலிமை” சிமெண்ட் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

    இந்த புதிய ரக “வலிமை” சிமெண்ட், அதிக உறுதியும், விரைவாக உலரும் தன்மையும், அதிக வெப்பத்தை தாங்கும் தன்மையும் கொண்டது.

    நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் நிர்வாக இயக்குநர் அனில் மேஷ்ராம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×