search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமை வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
    X
    பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமை வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாமை வாக்களர் பட்டியல் பார்வையாளர் மகேஷ்வரன் ஆய்வு செய்தார்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மாடூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிஆகிய வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் பெயர் சேர்த்தல், நீக்கம் சிறப்பு முகாமை கள்ளக்குறிச்சி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேஷ்வரன், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    பின்னர் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேஷ்வரன் கூறியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் நவம்பர் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தமுறை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. மேலும் 13, 14, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் செய்வதற்காக சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இந்த முகாமில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் 31-12-2003-ந் தேதி வரை பிறந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், இறந்தவர்கள் பெயர்களை நீக்குவதற்கும், பெயர், முகவரி மற்றும் வேறு ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் இந்த முகாம்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,272 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்ப்பதற்கு 9,478 பேர், பெயர் நீக்கம் செய்வதற்கு 214 பேர், பெயர், முகவரி திருத்தம் செய்வதற்கு 655 பேர், ஒரே தொகுதிக்குள் இடமாற்றம் செய்வதற்கு 318 பேர் என மொத்தம் 10,665 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    மேலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் சரவணன், தாசில்தார் விஜயபிரபாகரன், வருவாய் ஆய்வாளர் ராமசாமி, நகராட்சி ஆணையர் குமரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×