search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறிகள்
    X
    காய்கறிகள்

    மழை வெள்ளத்தால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் வருகை குறைந்தது

    மழை வெள்ளம் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வாங்கி செல்ல சில்லரை வியாபாரிகள், காய்கறி மற்றும் மளிகை கடைக்காரர்கள் அதிக அளவில் வரவில்லை.
    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 250-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அனைத்து இடங்களும் வெள்ளக் காடானது. மழை வெள்ளம் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வாங்கி செல்ல சில்லரை வியாபாரிகள், காய்கறி மற்றும் மளிகை கடைக்காரர்கள் அதிக அளவில் வரவில்லை.

    கோயம்பேடு மார்கெட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஒரு சில வியாபாரிகள் மட்டுமே வாகனங்களில் வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர். இதன் காரணமாக மார்கெட் வளாகம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

    பெரும்பாலான மொத்த வியாபாரிகளுக்கு வந்த முட்டை கோஸ், வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் லாரிகளில் இருந்து இறக்கப்படவில்லை லோடுடன் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் தேக்கம் அடைந்து உள்ளன.

    மொத்த விற்பனை கடைகளில் தக்காளி பெட்டி ஒன்று (14 கிலோ) நேற்று முன்தினம் ரூ.1100-க்கும், நேற்று ரூபாய் ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.

    சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்கப்பட்டது. இன்று நள்ளிரவில் ரூ.700-க்கும் விற்கப்பட்ட தக்காளி பெட்டியை வாங்கி செல்ல யாரும் வரவில்லை. 40-க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்ததால் தக்காளி தேக்கமடைந்து வீணாவதை தடுத்திடும் வகையில் மொத்த வியாபாரிகள் தக்காளி விலையை அதிரடியாக குறைத்தனர். இதையடுத்து ஒரு பெட்டி தக்காளி ரூ.500-க்கு விற்கப்பட்டது.

    இதேபோல் வியாபாரிகள் வராததால் பெரும்பாலான பச்சை காய்கறிகளின் விலையும் இன்று கடும் வீழ்ச்சி அடைந்தது. ஊட்டி கேரட் ஒரு கிலோ ரூ.40-க்கும், ஒரு கிலோ அவரைக்காய் ரூ.40-க்கும், ஒரு கிலோ உஜாலா கத்தரிக்காய் ரூ.30க்கும், ஒரு கிலோ பீன்ஸ் ரூ.30-க்கும், ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.30-க்கும் விற்கப்பட்டு வருகிறது. ஆனால் அதையும் வாங்கி செல்ல சந்தைக்கு வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

    Next Story
    ×