search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கம்பத்தில் இன்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    X
    கம்பத்தில் இன்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத தி.மு.கவுக்கு பாடம் புகட்டுவோம்- ஓ.பன்னீர்செல்வம்

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்தும் முடிவில் எந்தவித சமரசமும் செய்து கொள்ள மாட்டோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
    கம்பம்:

    முல்லை பெரியாறு அணையில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை நிலை நாட்ட வலியுறுத்தி தேனி மாவட்டம் கம்பத்தில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 15 வருட சட்ட போராட்டங்களை நடத்தினார். கடந்த 2000-ம் ஆண்டு அணை பலவீனமாக இருப்பதாகவும், நீர்மட்டத்தை 136அடிக்கு மேல் தேக்க கூடாது என்று கேரள அரசு தொடர்ந்து கூறி வந்தது. ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதாடியதையடுத்து 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவமான தீர்ப்பை வழங்கியது.

    அதன்படி 142 அடியாக அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி கொள்ளலாம். பேபி அணை, சிற்றணைகளை பராமரிப்பு செய்த பிறகு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என தெரிவித்தது. மேலும் அணை பராமரிப்புக்கு தமிழகம் செல்லும்போது அதற்கு கேரளா போதிய ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனவும் தெரிவித்தது. ஆனால் கேரளா மீண்டும் சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டி முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136அடிக்கு மேல் உயர்த்த முடியாத அளவுக்கு திருத்தம் கொண்டு வந்தது.

    அணை பலவீனமாக இருப்பதாகவும், எனவே நீர்மட்டத்தை உயர்த்த கூடாது என்று கூறிய கேரள அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு 17 பரிசோதனைகள் முல்லை பெரியாறு அணையில் மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அணையின் பாதுகாப்பு குறித்து தெரிவிக்கையில், பூகம்பமே வந்தாலும் முல்லை பெரியாறு அணைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மீண்டும் உறுதிபட தெரிவித்தனர். 2013-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய அதே ஆண்டில் 142 அடிவரை அணையின் நீர்மட்டம் உயர்த்தப்பட்டது. இதன்மூலம் தென்மாவட்ட விவசாயிகள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் பேபி அணையை சீரமைக்க ரூ.6½கோடி நிதியும் ஒதுக்கீடு செய்தார்.

    அணை பராமரிப்புக்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்றுமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் அதற்கு கேரளா அனுமதி அளிக்கவில்லை.

    முல்லை பெரியாறு அணையை திறப்பதற்கு, தமிழகத்திற்கு மட்டுமே உரிமை உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் கடந்த மாதம் அணையின் நீர்மட்டம் 139 அடியை எட்டுவதற்கு முன்பாகவே கேரள அமைச்சர்கள் சென்று தண்ணீரை ஏன் வெளியேற்றினார்கள் என்று கேட்டால் அமைச்சர் துரைமுருகன் சம்மந்தமில்லாமல் பதில் அளிக்கிறார்.

    முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் தமிழக விவசாயிகளின் உணர்வுகளை மதிக்காமல் செயல்படும் தி.மு.க அரசுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்தும் முடிவில் எந்தவித சமரசமும் செய்து கொள்ள மாட்டோம். 5 மாவட்ட விவசாயிகளை திரட்டி அ.தி.மு.க சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    Next Story
    ×