search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    சிக்கண்ணா கல்லூரி நிலத்தை மாற்றுப்பணிக்கு பயன்படுத்துவதை கைவிட வேண்டும் - முதல்வருக்கு மனு

    விரைவாக வளர்ந்து வரும் நகரத்தின் தேவைக்கேற்ப கல்லூரியை விரிவுபடுத்த இன்னும் நிலம் தேவைப்படும்.
    மங்கலம்:

    திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி நிலத்தை மாற்றுப்பணிக்கு பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி முன்னாள் மாணவர் பேரவையின்  தலைவரும்,மங்கலம் காங்கிரஸ் கமிட்டி தலைவருமான சபாதுரை- தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார். 

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் 1989 மற்றும் 1990-ஆம் ஆண்டுகளில் மாணவர் பேரவைத் தலைவராக தேர்வு பெற்று பணியாற்றினேன். 

    அதனைத்தொடர்ந்து தலைவராக செல்வம், செயலாளராக சின்னச்சாமி, பொருளாளராக லோகநாதன் ஆகியோர் தலைமையில்  முன்னாள் மாணவர்கள் சங்கம் அமைக்கப்பட்டது.  

    மேலும் சிக்கண்ணா கல்லூரிக்கு தேவையான வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சிக்கண்ணா செட்டியார் என்ற கொடைவள்ளல் 1960-ம் ஆண்டு கல்விப்பணிக்காக வழங்கிய 40 ஏக்கர் நிலத்தில் 4 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டிவிட்டார்கள். 

    மீதி இருந்த 36 ஏக்கர் நிலத்திற்கு முன்னாள் மாணவர்கள் சங்கம் மூலம் ரூ.1 கோடி மதிப்பில் சுற்றுச்சுவர் அமைத்துத்தரப்பட்டது. பின்னர் 36 ஏக்கரில் 5 ஏக்கர் ஏற்கனவே விளையாட்டு உள்அரங்கம் அமைக்க கையகப்படுத்திவிட்டனர்.

    தற்போது 29 ஏக்கர் நிலம் மட்டுமே மீதி உள்ளது. அதில் கல்லூரி கட்டிடம் 15 ஏக்கரிலும்,8 ஏக்கரில் விளையாட்டு மைதானமும், 6 ஏக்கரில் டாக்டர் அப்துல்கலாம் நினைவு தாவரவியல் பூங்காவும் உள்ளது.

    தற்போது உள்விளையாட்டு அரங்கம் அமைக்க 12 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து அந்த இடத்தில் இருந்த 300-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டியும்,உள்விளையாட்டு அரங்கம் அமைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

    விரைவாக வளர்ந்து வரும் நகரத்தின் தேவைக்கேற்ப கல்லூரியை விரிவுபடுத்த இன்னும் நிலம் தேவைப்படும் சூழலில், இருக்கும் இடத்தை எடுப்பதோடு, அங்கு ஓங்கி வளர்ந்து நிற்கும் 300-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி இயற்கைக்கு எதிராக நடைபெறும் இந்த நடவடிக்கையை தமிழக முதல்வர் பரிசீலித்து தடுத்து நிறுத்த வேண்டுகிறோம். 

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×