search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக்
    X
    டாஸ்மாக்

    குமரி மாவட்டத்தில் 4 நாட்களில் ரூ.15.23 கோடி மது விற்பனை

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் கடந்த 4 நாட்களில் ரூ15.23 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.
    நாகர்கோவில்:

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் பல மாதங்களாக பூட்டப்பட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

    தீபாவளி பண்டிகை நேரத்தில் பார்கள் மீண்டும் திறக்கப்பட்டது மதுப்பிரியர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது. குமரி மாவட்டத்திலும் மதுக்கடை பார்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அரசுக்கு கட்டவேண்டிய தொகையை ஏராளமான பார் உரிமையாளர்கள் செலுத்தவில்லை.

    அவ்வாறு ஏலத்தொகையை செலுத்தா பார்களை திறக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த 1-ந்தேதி 9 பார்கள் மட்டுமே செயல்பட்டன. மற்ற கடைகளில் இருந்த பார்கள் அனைத்தும் அடைக்கப்பட்டே இருந்தன. 100-க்கும் மேற்பட்ட பார்கள் திறக்கப்படவில்லை.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் கடந்த 4 நாட்களில் ரூ15.23 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த 1-ந்தேதி ரூ. 3கோடியே 5 லட்சத்து 99 ஆயிரத்து 860-க்கும், 2-ந்தேதி ரூ.2 கோடியே 98 லட்சத்து 81 ஆயிரத்து 250-க்கும் மது பானங்கள் விற்பனையாகி இருக்கிறது.

    தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான நேற்று முன்தினம்(3-ந்தேதி) ரூ.4கோடியே 41 லட்சத்து 35 ஆயிரத்து 660-க்கு மதுபானங்கள் விற்பனையாகின. தீபாவளி பண்டிகையன்று ரூ.4கோடியே 77 லட்சத்து 52 ஆயிரத்து 880-க்கு மதுபானங்கள் விற்றிருக்கிறது.

    கடந்த 4 நாட்களிலும் மொத்தம் ரூ.15 கோடியே 23 லட்சத்து 69 ஆயிரத்து 650-க்கு மதுபானங்கள் விற்பனையாகி இருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். அதே வேளையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை விற்பனை குறைவு தான் என்றும் கூறியிருகின்றனர்.

    குமரி மாவட்டத்தில் மதுபான விற்பனை கடந்த ஆண்டை விட குறைவதற்கு பார்கள் முழுமையாக செயல்படாததும், தொடர் மழையும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
    Next Story
    ×