search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அணையில் இருந்து தண்ணீர் வெளியேறிய காட்சி.
    X
    அணையில் இருந்து தண்ணீர் வெளியேறிய காட்சி.

    உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததையொட்டி வனப்பகுதியில் உள்ள காந்தளூர், மூணார், மறையூர் உள்ளிட்ட அமராவதி அணையின் நீராதாரங்களில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.
    உடுமலை:

    உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை ஆதாரமாகக் கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் கேரளா மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக் காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அழித்து வருகிறது.

    அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதிஆறு மூலமாகவும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரப்படுகிறது.

    அத்துடன் அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததையொட்டி வனப்பகுதியில் உள்ள காந்தளூர், மூணார், மறையூர் உள்ளிட்ட அமராவதி அணையின் நீராதாரங்களில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.

    இதனால் அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது.இதன் காரணமாக அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வந்ததுடன் முழு கொள்ள ளவில் நீடித்து வருகிறது. இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது.

    இதையடுத்து அதிகாலை 3 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 300 கனஅடி நீர்வரத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி 9 கண்மதகுகளில் மூன்று மதகுகள் பிரதான கால்வாய் சட்டர்கள் மூலமாக 4 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    அணைக்கு வந்து கொண்டு இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. ஆனாலும் மூன்று மதகுகள் வழியாக தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. மதகுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்ட செய்தி சுற்றுப்புற கிராமங்களில் காட்டுத்தீயாக பரவியது.

    அதை தொடர்ந்து அங்கு திரண்ட பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மதகுகளுக்கு முன்பு நின்று புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டும் உறவினர் களுக்கு அனுப்பியும் மகிழ்ந்தனர். இதனால் அணைப்பகுதியில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது.

    மேலும் வானம் இருள் சூழ்ந்து மேகமூட்டமாக காணப்படுவதால் கனமழை பெய்வதற்கான சூழல் நிலவுகிறது. இதைதொடர்ந்து அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்தை உதவிப்பொறியாளர் பாபுசபரீஸ்வரன் தலைமையிலான பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    அத்துடன் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் 9 கண் மதகுகள், சட்டர்கள், பிரதான கால்வாய் வழியாக கூடுதலாக தண்ணீர் திறப்பதற்கான நட வடிக்கைகளும் அதிகாரிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    Next Story
    ×