search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மழைக்கால நோயில் இருந்து பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் - வேளாண் அதிகாரி விளக்கம்

    திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்கிறது. இந்த சீசனுக்கு வேளாண் பயிர்களை சில நோய்கள் தாக்குகின்றன.
    திருப்பூர்:

    மழைக்காலத்தில் காற்றில் அதிக ஈரப்பதம் இருப்பதால் நோய் மற்றும் சில பூச்சிகளின் தாக்கம் அதிகமாகி பயிர்களுக்கு சேதம் ஏற்படுகிறது. தண்ணீர் தேங்குவதால் செடி நீரில் மூழ்கி இறந்து விடும். வெள்ளம் சூழ்ந்த 24 மணி நேரத்தில் ஆக்ஸிஜன் அளவு பூஜ்யத்தை எட்டிவிடும். 

    மண்ணிலுள்ள காற்று வெளியில் தண்ணீர் நிரம்பி வேர்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காது. வெள்ளம் 2 நாட்களுக்கு மேல் நீடித்தால் வேர் அழுகல் ஏற்பட்டு செடி காய்ந்து விடும் என்கின்றனர் வேளாண் அதிகாரிகள்.

    இதுகுறித்து பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலிங்கம் கூறியதாவது:

    திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்கிறது. இந்த சீசனுக்கு வேளாண் பயிர்களை சில நோய்கள் தாக்குகின்றன. வாழையை முடிக்கொத்து நோய், சுருள் வெள்ளை ஈ நோய் தாக்குகிறது. இது ஒரு வைரஸ் நோய். நோய் தாக்கிய வாழை இலையை உடனடியாக வெட்டி மண்ணில் புதைத்து விட வேண்டும்.

    இல்லாவிடில் மற்ற வாழைகளுக்கும் பரவிவிடும். டைமெதொயேட் மருந்தை 20 லிட்டர் நீரில் 10 மில்லி கலந்து தெளித்தால் நோய் பரவலை தடுக்கலாம். சுருள் வெள்ளை ஈ யை கட்டுப்படுத்த, இமிடேகுளோபிரிட் மருந்தை 10 லிட்டர் நீரில் 3 மில்லி கலந்து தெளிக்கலாம். அல்லது தயோமெதோக்சாம் மருந்தை 10 லிட்டருக்கு 3 கிராம் கலந்து தெளிக்க வேண்டும். 

    தீவன சோளத்தை குலைநோய் தாக்குகிறது. இது பூஞ்சாண வகை நோய். மெட்டலாக்சில் 20 கிராம் மற்றும் மேங்கோசெப் மருந்தை 10 லிட்டர் நீரில் 20 கிராம் கலந்து தெளிக்க வேண்டும்.

    10 லிட்டர் தண்ணீரில் 20 மில்லி ஹெக்சாகோனஸோல் மருந்து அல்லது 10 லிட்டர் நீரில் 15 மில்லி டெபுகனசோல் மருந்து கலந்து தெளித்தால்  சின்னவெங்காயத்தை தாக்கும் கோழிக்கால் நோயை கட்டுப்படுத்தலாம்.

    வெள்ளை ஈக்கள் எனும் பூச்சி மூலம் பப்பாளியில் மஞ்சள் தேமல் நோய் பரவுகிறது. இமிடேகுளோபிரிட்டை 10 லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி அல்லது தயோமெதோக்சாமை 10 லிட்டர் நீருக்கு 3 கிராம் கலந்து தெளிக்க வேண்டும். சுண்ணாம்புச்சத்து பற்றாக்குறையால் தக்காளி சேதமடைகிறது. 10 கிராம் கால்சியம் நைட்ரேட்டை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாள் இடைவெளியில்  3முறை தெளிக்க வேண்டும்.

    தென்னையை தாக்கும் குருத்து அழுகல் நோயை தடுக்க 2.5 கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து குருத்து நனையும்படி 1 லிட்டர் அளவு ஊற்ற வேண்டும். எலுமிச்சையை சொறிநோய் தாக்குகிறது. 

    இது ஒரு பாக்டீரியா நோய். 5 கிராம் ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் மருந்தை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும். 20 மில்லி மாலத்தியான் மருந்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால் முருங்கையில் மொக்குப்புழுவை கட்டுப்படுத்தலாம். மக்காச்சோளத்தில் அசுவினி தாக்குவதை கட்டுப்படுத்த 3 மி.லி., இமிடேகுளோபிரிட் மருந்தை 10 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

    தென்னைக்கு ஒரு மரத்துக்கு 1.3 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் பாஸ்பேட், 3.5 கிலோ பொட்டாஷ், 200 கிராம் போராக்ஸ், ஒரு கிலோ நுண்ணூட்ட கலவை, 40 மில்லி தென்னை டானிக் கொடுக்க வேண்டும். 

    இந்த உர அளவை பாதியாக பிரித்து 6 மாத இடைவெளியில் ஆண்டுக்கு இரண்டு முறை கொடுக்க வேண்டும். தொடர்ந்து 3 ஆண்டுகள் கொடுத்தால் தென்னையில் சத்து குறைபாடு நீங்கும். இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×