search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    X
    அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    நவம்பர் மாதத்திற்கு 1.40 கோடி கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கீடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

    செப்டம்பர் மாதத்தில் 1.04 கோடி தடுப்பூசிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினால் மேலும் அந்த மாதத்தில் 43 லட்சம் தடுப்பூசிகளை கூடுதலாக வழங்கியதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மாநிலம் முழுவதும் ஏற்கனவே 6 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, நேற்று 7-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் மாநிலம் முழுவதும் நடைபெற்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடையாறு மண்டலம் கஸ்தூரிபாய் நகர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற 7-வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதனைத்தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நேற்று இரவு வரை சுமார் 50 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை கோவாக்சின் 2-வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்கள் 13 லட்சம் பேர் உள்ள நிலையில், 3 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது.

    முதல்-அமைச்சரின் ஆலோசனையின்படி, மத்திய அரசிடம் துறை செயலாளருடன் நான் நேரடியாக சென்று 10 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யும்படி கேட்டுக்கொண்டேன். அதனடிப்படையில், நேற்றுமுன்தினம் மத்திய அரசின் சார்பில் 4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

    கொரோனா தடுப்பூசி

    மத்திய அரசினைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டிற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன்படி செப்டம்பர் மாதத்தில் 1.04 கோடி கோவிட் தடுப்பூசிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினால் மேலும் அந்த மாதத்தில் 43 லட்சம் கோவிட் தடுப்பூசிகளை கூடுதலாக வழங்கியது.

    இதேபோன்று அக்டோபர் மாதத்தில் 1.22 கோடி ஒதுக்கீடு செய்தது அந்த தடுப்பூசிகளையும் நம்முடைய அரசு முழுமையாக பயன்படுத்தியதால் கூடுதலாக 3 லட்சம் தடுப்பூசிகள் அக்டோபர் மாதத்தில் வழங்கப்பட்டது.

    இவ்வாறு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் மத்திய அரசு ஒதுக்கிய தடுப்பூசிகளை முழுவதும் சிறப்பாக பயன்படுத்தி செயல்பட்ட காரணத்திற்காகவும், முதல்-அமைச்சரின் கோரிக்கையை ஏற்றும் நவம்பர் மாதத்தில் 1.40 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

    நவம்பர் மாத இறுதிக்குள் 100 சதவீதம் முதல் தவணைத் தடுப்பூசியும், 50 சதவீதத்திற்கு மேல் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு அடையும் வகையில் நாம் அனைவரும் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைத்தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனும் நங்கநல்லூர் பகுதியில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில், தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, அசன் மவுலானா, மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், அரசு முதன்மை செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி மற்றும் துணை ஆணையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×