search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் மனு அளிக்கப்பட்ட காட்சி.
    X
    அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் மனு அளிக்கப்பட்ட காட்சி.

    பல்லடத்தில் பி.ஏ.பி பாசனத்திட்டம் விரிவாக்கம் - அமைச்சரிடம் மனு

    கொங்கு மண்டல மக்களின் வாழ்வாதாரமாக அமைந்த திட்டம் பி.ஏ.பி. என்னும் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டமாகும்.
    பல்லடம்:

    பல்லடத்தில் பி.ஏ.பி. புதிய பாசன பகுதி விரிவாக்கம் கோரும் இயக்கம் சார்பில் கோடங்கிபாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி, அய்யம்பாளையம் ஊராட்சி முன்னாள் துணை தலைவர் வேலுசாமி உள்ளிட்டோர் அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். 

    அதில் கூறியிருப்பதாவது:

    கொங்கு மண்டல மக்களின் வாழ்வாதாரமாக அமைந்த திட்டம் பி.ஏ.பி. என்னும் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் திருப்பூர், கோவை, மாவட்டங்களில் சுமார் 3,77,150 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    பல்லடம், சூலூர் சுற்றுவட்டார ஊர்களில் உள்ள மண்வளம் மிக்க பகுதிகளில் பல லட்சம் டன் தானியங்கள் விளைந்து வந்தது. ஆனால் நீர் இல்லாத காரணத்தால் இந்த பகுதியில் கடந்த 20 வருடங்களாக வேளாண்மை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதோடு விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர், கோவை, மாவட்டங்களில் தற்போது உள்ள பாசன திட்ட ஆயக்கட்டிலிருந்து தொழிற்சாலைகள், காற்றாலைகள், நகரமயமாதல் போன்ற காரணங்களால் சுமார் 9000 ஏக்கர் பாசன பகுதி நீக்குவதற்கு, ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுப்பணித் துறையால் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. 

    நீக்கப்பட உள்ள பகுதிக்கு பதிலாக மிகவும் வறட்சியான பல்லடம், சூலூர் வட்டத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளை இந்த பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் சேர்த்து பயனடையச் செய்ய வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதால், மக்களின் குடிநீர் பிரச்சனை முற்றிலும் தீரும். 

    நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து நீரின் உப்பு மற்றும் கடினத்தன்மை மாறும். விவசாய உற்பத்தியின் விளைவாக விலைவாசி குறையும். மக்களின் வாழ்வாதாரம் பெருகும். தொழில் கூடங்கள் மற்றும் கோழிப் பண்ணைகளுக்கு உள்ள நீர் பற்றாக்குறை தீரும். 

    சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பரப்பு மேம்பட்டு பல்லுயிர் பெருக்கம் ஏற்படும். எனவே இந்த பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டுகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×