search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
    X
    பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

    நாட்டின் விடுதலைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த தியாக செம்மல் தேவர் திருமகனார்

    நாட்டின் விடுதலை போராட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல போராட்டங்களுக்காக தனது வாழ்நாளில் ஐந்தில் ஒரு பங்கினை சிறையில் கழித்த தியாக செம்மல் முத்துராமலிங்க தேவரை என்றென்றும் நினைவுகூருவோம்.
    தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்கிற சிற்றூரில் 1908-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி பிறந்தவர் முத்துராமலிங்க தேவர்.

    இவர் உக்கிரபாண்டி- இந்திராணி தம்பதிக்கு ஒரே மகன். 6 மாத கைக்குழந்தையாக இருந்தபோது தாயை பறிகொடுத்ததால், உறவின் முறை பாட்டியான பார்வதியம்மாளின் அரவணைப்பில் பசும்பொன்னை அடுத்துள்ள கல்லுபட்டி என்கிற கிராமத்தில் வளர்ந்தார். பள்ளிக் கல்வியுடன் குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், சிலம்பம் போன்றவற்றைக் கற்றுத் தேறினார். தண்ணீரில் மிதப்பது அவருக்கு கைவந்த கலையாகும். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் தனது 13-வது வயதில் அவருக்கு பள்ளிப் படிப்பைத் தொடர்வதில் சிக்கல் உண்டானது.

    1927-ம் ஆண்டில் குடும்பச் சொத்து வழக்கு தொடர்பாக சென்னை சென்ற அவர் பிரபல காங்கிரஸ் பிரமுகரும், முன்னணி வழக்கறிஞருமான சீனிவாசனை சந்தித்தார். அவர் சென்னையில் நடந்து கொண்டிருந்த அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திற்கு முத்துராமலிங்கத் தேவரை அழைத்துச்சென்றார். அப்போது சீனிவாசனின் எழுச்சிமிகு உரையையும் சுபாஷ் சந்திரபோசின் உணர்ச்சிமிகு உரையையும் கேட்டு வியந்தார். இதனால் விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொள்ள தீர்மானித்தார். அப்போது தொடங்கியது அவரது அரசியல் பயணம். தனது உடல், பொருள், ஆவி என அனைத்தையும் இந்திய திருநாட்டின் விடுதலைக்காக காணிக்கையாக்கினார். அன்று முதல் விலை உயர்ந்த ஆடைகளை உடுத்துவதை நிறுத்திக்கொண்டு, தூய கதர் ஆடைகளை விரும்பி அணிய தொடங்கினார்.

    பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தேசிய உணர்வு மற்றும் தெய்வீகப் பற்று குறித்து அறிந்து கொண்ட நேதாஜி, அவரை கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். தனது தாயாரிடம் உங்களுடைய கடைசி மகன் பிறந்திருக்கிறான் என்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அறிமுகம் செய்து வைத்தார் நேதாஜி.

    பசும்பொன் முத்துராமலிங்கம். அப்போதே தாய்மொழியாம் தமிழ் அவரிடம் களிநடம் புரியும். ஆங்கில மொழியையும் நயம்பட பேசுவார். இரு மொழிகளையும் நீண்ட நேரம் பேசும் புலமை இருந்தது.

    தமிழ்மொழியில் சொல்லாடல் நிறைந்த அவரது கன்னிப்பேச்சு 1933-ல் அரங்கேறியது. இது திட்டமிடப்பட்ட நிகழ்வு அல்ல, யதார்த்தமான நிகழ்வு. முதுகுளத்தூர் அருகே உள்ள சாயல்குடி கிராமத்தில் சேதுராமன் என்பவர் சுவாமி விவேகானந்தர் பெயரில் ஒரு வாசகசாலை திறந்தார்.

    அந்த விழாவில் விவேகானந்தரின் படத்தை திறந்து வைத்து பேச அழைக்கப்பட்டிருந்த மதுரை கிருஷ்ணசாமி பாரதியால் வர இயலாமல் போனது. அந்த சமயம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாயல்குடி அருகே உள்ள இலந்தைகுளம் என்ற கிராமத்திற்கு வந்திருந்ததை அறிந்த சேதுராமன் அங்கு சென்று அவரை அழைத்து வந்து விழாவில் பேச வைத்தார்.

    அதுவரை எந்த ஒரு மேடைகளிலும் பேசிப் பழக்கமில்லை என்றாலும் விவேகானந்தரின் தத்துவங்கள் பற்றி மூன்று மணி நேரம் பேசினார். மடைதிறந்த வெள்ளம் போல இருந்தது அவரது பேச்சு. கூட்டத்திற்கு வந்திருந்த பெருந்தலைவர் காமராஜரும் முத்துராமலிங்க தேவரின் பேச்சை முதல்முறையாக கேட்டு மெய்மறந்து போனார், உங்களை போன்று பேசக்கூடியவர்களின் சேவை காங்கிரஸ் கட்சிக்குத் தேவை என்று குறிப்பிட்டார்.

    1934-ம் ஆண்டில் 90-க்கும் மேற்பட்ட சமூகத்தினரை அடக்கி ஒடுக்கும் நோக்குடன் ஆங்கில அரசு, சீட்டை சட்டம் எனப்படும் குற்றப்பரம்பரை சட்டத்தை கொண்டுவந்தது. இந்த சட்டத்திற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் முழுவீச்சில் இறங்கிய முத்துராமலிங்கத்தேவர் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் சென்று மக்களை திரட்டினர்.

    அரசு விழாவை புறக்கணிக்கும் போராட்டங்களிலும் ஈடுபட்டார், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக 1942-ம் ரத்து செய்யப்பட்டது குற்றப்பரம்பரை சட்டம்.

    1935-36-ல் நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பட்டாபி சீதாராமையாவை நிறுத்தினார் காந்திஜி, அவரை எதிர்த்து போட்டியிட்ட நேதாஜிக்கு ஆதரவாக களத்தில் இறங்கினார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். தேர்தலில் நேதாஜி வெற்றி கண்டார். நேதாஜிக்கு அதிக வாக்குகள் கிடைத்த மாநிலம் தமிழகம்தான்.

    1937-ல் சென்னை மாகாண சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட போது தென் மாவட்டங்களில் நீதிக்கட்சி அதிக செல்வாக்கு பெற்றிருந்தது.

    ராமநாதபுரம் தொகுதியில் நீதிக்கட்சி, மன்னர் நாகநாத சேதுபதியை நிறுத்தியது. சேதுபதி மன்னருக்கு எதிராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் பசும்பொன் பெருமகனாரை வேட்பாளராக அறிவித்தனர். முதலில் தேர்தலில் போட்டியிட மறுத்த அவர் பிறகு தலைவர்களின் வற்புறுத்தலால் சம்மதித்தார். தேர்தலில் மன்னர் சேதுபதி தோல்வி அடைந்தார். முத்துராமலிங்கத்தேவர் அபார வெற்றி பெற்றார். அதற்கு பின் வந்த தேர்தல்களிலும் கடும் சோதனைகளை சந்தித்து காங்கிரஸ் கட்சி தென் மாவட்டங்களில் காலூன்றி வளர்ந்ததற்கு பசும்பொன் பெருமகனாரே காரணம் என பாராட்டினார், ராஜாஜி. காங்கிரசை காத்தான் என்ற பட்டத்தையும் முத்துராமலிங்க தேவருக்கு சூட்டினார் தீரர் சத்தியமூர்த்தி. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தான் போட்டியிட்ட ஒரு தேர்தலில் கூட தோல்வி அடைந்தது இல்லை. அவர் கடைசியாக 1962-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். வெற்றி வசமான போதிலும் உடல்நலக்குறைவால் நாடாளுமன்ற கூட்டத்தில் அவரால் பங்கேற்க முடியவில்லை.

    மதுரையை அடுத்த திருநகரில் தங்கி ஓய்வும் சிகிச்சையும் பெற்று வந்த அவரை காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றனர். ஆனால் அவர் இவ்வுலகை விட்டு மறைந்தார். 1963-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி, பசும்பொன்னில் வள்ளலாரின் முறைப்படி பூஜை நடத்தி அமர்ந்த நிலையில் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என வாழ்ந்தவர் முத்துராமலிங்க தேவர். நாட்டின் விடுதலை போராட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல போராட்டங்களுக்காக தனது வாழ்நாளில் ஐந்தில் ஒரு பங்கினை சிறையில் கழித்த தியாக செம்மலை என்றென்றும் நினைவுகூருவோம்.


    Next Story
    ×