search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    X
    பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    வீடு, வீடாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    குடிசை பகுதிகளில் வாழும் மக்கள் பலர் தங்களுக்கு பல வருடங்களாக வீட்டு மனை பட்டா கிடைக்கவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் புகார் அளித்தனர்.
    சென்னை:

    தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது தொகுதியான சைதாப்பேட்டையில் பொதுமக்களின் குறைகளை கண்டறியவும் அதற்கு தீர்வு காணவும் வித்தியாசமான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

    மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி என்பதைப்போல் வீடுதேடி குறைகேட்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

    இந்த தொகுதியில் மொத்தம் 14 வார்டுகள். ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு நாள் என்ற அடிப்படையில் 14 நாட்கள் இந்த குறைகேட்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளார்.

    எந்த வார்டில் குறைகேட்க செல்கிறாரோ அந்த வார்டு முழுவதும் முன்கூட்டியே அறிவித்துவிடுகிறார்கள். பொதுமக்களும் தங்கள் குறைகளை அமைச்சரிடம் சொல்ல தயாராக இருக்கிறார்கள்.

    முதல் நாளான இன்று 142-வது வார்டு முழுவதும் குறைகேட்டார். காலை 7 மணிக்கு தெருவில் இறங்கி நடக்க தொடங்கினார். அவருடன் அனைத்துதுறை அதிகாரிகளையும் அழைத்து சென்றார்.

    வீடு வீடாக சென்று மக்களிடம் ஏதாவது குறை இருக்கிறதா என்று கேட்டார். பெரும்பாலான மக்கள் குப்பை குவிந்துகிடப்பது, சரியாக அள்ளாதது, குடிநீர் பிரச்சனை தொடர்பாக புகார் தெரிவித்தனர். அதை உடனே நிவர்த்தி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதிகாரிகளும் உடனே அந்த வார்டு சுகாதார அலுவலர்கள், உதவி பொறியாளர்களை வரவழைத்து சீர் செய்தனர்.

    பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்


    குடிசை பகுதிகளில் வாழும் மக்கள் பலர் தங்களுக்கு பல வருடங்களாக வீட்டு மனை பட்டா கிடைக்கவில்லை என்றனர். அது தொடர்பாக வருவாய்துறை அதிகாரிகளை ஆய்வு மேற்கொள்ள கூறினார். தெரு விளக்குகள் இல்லாத தெருக்களில் உடனே அமைத்து கொடுக்கப்பட்டது. விதவைகள், முதியோர் உதவி தொகைகள் பெறுவதில் இருந்த சிக்கல்களுக்கும் தீர்வு காணப்பட்டது.

    ஒவ்வொரு வார்டுக்கும் தலா 5 மணி நேரம் வீதம் 70 மணி நேரம் நடந்தே வீடுகளுக்கு சென்று குறை கேட்க திட்டமிட்டுள்ளார். காரணம் என்ன?

    வீடு வீடாக செல்வது பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்பதற்காக தொகுதி முழுவதும் நடந்துதான் சென்றேன். இப்போது எனது தொகுதி மக்களின் குறைகளை கேட்டு தீர்க்க வேண்டியது எனது கடமை.

    தொகுதி அலுவலகம், வீடு ஆகியவற்றில் தினமும் ஏராளமான பார்வையாளர்கள் வருவதால் தொகுதி மக்கள் நேரடியாக சந்திப்பதில் சிரமம் ஏற்படுவதாக கூறினார்கள்.

    எனவே நானே நேரடியாக வீடு வீடாக செல்ல முடிவு செய்துள்ளேன். நாளை மெகா தடுப்பூசி முகாம் என்பதால் நாளை செல்லமாட்டேன். அதன்பிறகு தொடரும். இதேபோல் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நேரில் சென்று குறைகேட்க திட்டமிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., பகுதி செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி, சைதை மா.அன்பரசன், நாகா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×