search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டாசுகள்
    X
    பட்டாசுகள்

    தமிழகம் முழுவதும் 6,810 பேர் விண்ணப்பம்- பட்டாசு கடைகள் அமைக்க 6,111 பேருக்கு அரசு அனுமதி

    தீபாவளிக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் பட்டாசு கடைகளை திறக்க வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    சென்னை:

    தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு கொண்டாட்டம்தான். இதில் இனிப்பும் ஒரு அங்கமாக உள்ளது.

    கடந்த ஆண்டு தீபாவளி, கொரோனா பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டது. பண்டிகை கொண்டாட்டம் உற்சாகமில்லை.

    ஆனால் இந்த வருடம் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதால் முழுமையான தளர்வு அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.

    கொரோனா வைரஸ்

    இதனை தொடர்ந்து தீபாவளி விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தீபாவளி பட்டாசு கடைகளுக்கும் கடந்த ஆண்டை விட அதிகளவு விண்ணப்பித்து உள்ளனர்.

    சென்னை உள்பட அனைத்து பகுதிகளில் இருந்தும் 6,810 பேர் பட்டாசு கடை வைக்க விண்ணப்பித்து இருந்தனர்.

    தீயணைப்பு துறையினரின் தடையில்லா சான்று பெற்ற பிறகுதான் பட்டாசு கடைகள் திறக்க அனுமதிக்கப்படும். மாவட்ட வருவாய் துறை இருந்து சான்று பெறுவதும் அவசியமாகிறது. பட்டாசு கடைகள் வைக்க 40 வகையான கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறது.

    இறுதியாக தீயணைப்பு துறையினரின் தடையில்லா சான்று பெற்ற பிறகு பட்டாசு கடைகள் திறக்கப்படுகின்றன.

    தீபாவளிக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் பட்டாசு கடைகளை திறக்க வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை தீயணைப்பு துறையினர் நேரில் ஆய்வு செய்த பிறகு தான் இறுதியாக பட்டாசு கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் இதுவரையில் 6,111 கடைகளுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது.

    சென்னையில் 890 விண்ணப்பங்களும், கோவையில் 703, சேலம் 520 விண்ணப்பங்களும் பட்டாசு கடைகள் வைக்க பெறப்பட்டுள்ளன. பெறப்பட்டுள்ள 6,810 மொத்த விண்ணப்பங்களில் 285 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 414 விண்ணப்பங்கள் அனுமதிக்காக காத்து இருக்கின்றன.

    இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு 6,109 பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு 5,783 கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. விதிமுறைகளை மீறியதாக 326 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன.

    சென்னை புறநகரை பொருத்தவரை 210 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தென்சென்னையில் 362, மத்திய சென்னையில் 196, வடசென்னையில் 132 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

    இதில் 11 விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டன. 160 விண்ணப்பங்கள் தடையில்லா சான்று வழங்க நிலுவையில் உள்ளன. கடலூரில் 353, ஈரோடு 300, விருதுநகர் 362, புதுக்கோட்டை 288, நாகப்பட்டனம் 293, திருவாரூர் 239, தஞ்சாவூர் 254, நாமக்கல் 275, திருப்பூர் 224 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 வியாபாரிகள் மட்டுமே பட்டாசு கடைக்கு விண்ணப்பித்தனர். தென்காசியில் 20 பேர் விண்ணப்பித்தனர்.

    இன்னும் 1000 கடைகளுக்கு விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். இரவு-பகலாக ஆய்வு செய்து நிலுவையில் உள்ள கடைகளுக்கும், புதிதாக விண்ணப்பிக்க கூடியவர்களுக்கும் அனுமதி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.



    Next Story
    ×