search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    X
    மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    மதுரையில் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய சசிகலா

    கொட்டும் மழையிலும் சசிகலாவுக்கு ஆதரவாளர்களும், அ.ம.மு.க.வினரும் குடை பிடித்தப்படி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அ.ம.மு.க.-அ.தி.மு.க. கொடிகளை ஏந்தி தொண்டர்கள் கோ‌ஷமிட்டனர்.
    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. அங்கு ஆண்டுதோறும் அக்டோபர் 28, 29, 30 தேதிகளில் தேவர் ஜெயந்தி-குருபூஜை நடைபெறும்.

    இந்த ஆண்டுகான ஜெயந்தி-குருபூஜை விழா நேற்று தேவரின் ஆன்மீக விழாவோடு தொடங்கியது. இன்று அரசியல் விழா கொண்டாடப்படுகிறது. நாளை குருபூஜை நடக்கிறது.

    அன்றைய தினம் அரசியல் கட்சிகள் திரண்டு வந்து தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார்கள்.

    இந்த நிலையில் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சசிகலா திட்டமிட்டார். 30-ந்தேதி ஏராளமானோர் அங்கு திரள்வார்கள் என்பதால் 29-ந்தேதியே (இன்று) தேவர் நினைவிடத்தில் சசிகலா மரியாதை செலுத்த முடிவு செய்தார்.

    இதற்காக அவர் தஞ்சாவூரில் இருந்து கார் மூலம் நேற்று மாலை மதுரை வந்தார். அவருக்கு மதுரை மாவட்ட எல்லையான மேலூர் அருகே உள்ள கொட்டாம்பட்டி ஒன்றியம் வலைசேரிபட்டி விலக்கு, கருங்காலக்குடி, கச்சிராயன் பட்டி, குன்னார்பட்டி விலக்கு பகுதிகளில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து தனியார் விடுதிக்கு வந்து இரவில் தங்கினார். அவரை பலரும் சந்தித்தனர். குறிப்பாக நெல்லை, தென்காசி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர்கள் பலர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    இன்று காலை ஓட்டலில் இருந்து ஜெயலலிதா பிரசாரத்திற்கு பயன்படுத்திய வேனில் ஏறி சசிகலா புறப்பட்டார். அந்த வேனில் அ.தி.மு.க. கொடி கட்டப்பட்டு இருந்தது.

    கொட்டும் மழையிலும் சசிகலாவுக்கு ஆதரவாளர்களும், அ.ம.மு.க.வினரும் குடை பிடித்தப்படி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அ.ம.மு.க.-அ.தி.மு.க. கொடிகளை ஏந்தி தொண்டர்கள் கோ‌ஷமிட்டனர்.

    மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


    மதுரை கோரிப்பாளையம் வந்த சசிகலா அங்கு உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் சிலைகளுக்கும் அவர் மாலை அணிவித்தார்.

    அதன் பிறகு சசிகலா பசும்பொன் புறப்பட்டு சென்றார். வழிநெடுக திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை, பரமக்குடி, பார்த்திபனூர், கமுதி உள்ளிட்ட பல பகுதிகளிலும் சசிகலாவுக்கு அ.ம.மு.க.வினர் மற்றும் ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.

    முன்னதாக மதுரை ஓட்டலில் தங்கி இருந்த சசிகலாவை அ.தி.மு.க.வின் மதுரை 27-வது வட்ட செயலாளர்கள் கே.எம்.கண்ணன், ரவிக்குமார், 46-வது வார்டு பொருளாளர் நாகராஜ், 27-வது வட்ட பிரதிநிதி ராஜா, துணைச் செயலாளர் ஆசைப்பாண்டியன், 46-வது வார்டு பொருளாளர் நாகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    இதே போல நெல்லை, தென்காசி, சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த சில அ.தி.மு.க. நிர்வாகிகளும் சசிகலாவை சந்தித்தனர்.

    பின்னர் அவர்கள் கூறுகையில், அ.தி.மு.க.வை வலிமையாக நடத்த சசிகலாவால்தான் முடியும். அவர் வழிநடத்தினால்தான் அ.தி.மு.க.வை காப்பாற்ற முடியும். அவரது தலைமையில் அனைவரும் ஒன்று சேரவேண்டும். சசிகலா தான் நிரந்தர பொதுச்செயலாளர். அவர் வந்தால் தான் வருகிற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றியை சந்திக்கும் என்றனர்.

    மதுரையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சசிகலாவை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க மேலிடம் முடிவு செய்துள்ளது.


    Next Story
    ×