search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு விரைவு பஸ்
    X
    அரசு விரைவு பஸ்

    தீபாவளி பண்டிகை- அரசு பஸ்களில் சொந்த ஊர் செல்ல 36 ஆயிரம் பேர் முன்பதிவு

    தமிழகம் முழுவதும் 1,100 அரசு விரைவு பஸ்களில் இதுவரையில் 36 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே இருப்பதால் சொந்த ஊர் செல்லக்கூடியவர்கள் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.

    அனைத்து ரெயில்களிலும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி நிரம்பி விட்டன. 1-ந் தேதி முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள் 23 ரெயில்களில் இணைக்கப்படுகிறது.

    சிறப்பு ரெயில்கள், பகல் நேர ரெயில்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 16,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு தொடங்கினாலும் கடந்த வாரம் வரை மிகவும் மந்தமாக இருந்து வந்தது. இந்த வாரம் முதல் முன்பதிவு விறுவிறுப்பாக நடக்கிறது.

    தமிழகம் முழுவதும் 1,100 அரசு விரைவு பஸ்களில் இதுவரையில் 36 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

    1-ந் தேதி முதல் முன்பதிவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சென்னையில் இருந்து மட்டுமில்லாமல் பல்வேறு நகரங்களில் இருந்தும் வெளியூர் செல்லக் கூடியவர்கள் தற்போதுதான் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.

    அரசு விரைவு பஸ்களில் இருக்கைகள் நிரம்பிய பின்னர் சிறப்பு பஸ்களும் முன்பதிவு வசதிக்குள் கொண்டுவரப்படும். எந்த இடங்களுக்கு அதிக தேவை ஏற்படுகிறது என்பதை ஆய்வு செய்து அதற்கேற்ப முன்பதிவை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். 1-ந் தேதியில் இருந்து நடப்பு முன்பதிவு செய்யப்படும். அன்றைய பயணத்திற்கு அப்போதே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வட்டார போக்குவரத்து கழகங்களில் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதில் இடைத்தரகர்கள் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிரைவிங் லைசென்சை புதுப்பிக்க ஆன்லைன் வசதி செய்யப்பட்டுள்ளது.

    பஸ்களை சுத்தம் செய்ய 62 ரூபாய் இருந்ததை 30 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் 42 ஆயிரம் கி.மீ. ஓடிய பின்னர் புதிய டயர் மாற்றப்படும். தற்போது 54 ஆயிரம் கி.மீ. பயன்படுத்த டயர்கள் கொள்முதல் செய்யப்படுகிறது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் மேலும் தெரிவித்தார்.

    அமைச்சர் ராஜகண்ணப்பன்

    ஆம்னி பஸ்களில் முன்பதிவு மந்தமாக உள்ளது. ஐ.டி. நிறுவனங்கள் முழுமையாக செயல்படாததால் வீடுகளில் இருந்து ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இதனால் ஆம்னி பஸ்கள் அதிகளவு இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    டீசல் விலை உயர்வால் கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சாதாரண மக்கள் தீபாவளி பயணத்திற்கு அரசு பஸ்களை பெரிதும் நம்பி உள்ளனர்.

    பெரும்பாலான ஆம்னி பஸ் ஆப்ரேட்டர்கள் குறைந்த அளவே பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளனர். போதுமான அளவு முன்பதிவு நடைபெறாததால் 800 பஸ்கள் வரை மட்டுமே இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளது என்று ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க பொருளாளர் மாறன் தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×