search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ஆணையை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்வழங்கிய காட்சி.
    X
    நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ஆணையை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்வழங்கிய காட்சி.

    திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் ரூ.600 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு - அமைச்சர் தகவல்

    வட்டியில்லா பயிர்க்கடன் நபர் ஜாமீன் பெயரில் ரூ.1.60 லட்சம், அடமானத்தின் பேரில் ரூ.3 லட்சம் வரை வழங்கப்படுகின்றது.
    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ஆணையை வழங்கினார். 

    பின்னர் அவர் கூறியதாவது:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம், காங்கேயம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் பயிர்க்கடன், விவசாய கடன் வழங்கப்படுகிறது. மொத்தம் 54 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு இக்கடன்கள் வழங்கப்படுகின்றது.

    நடப்பாண்டில் பயிர்க்கடன் வழங்க தமிழ்நாடு அரசால் மாநிலம் முழுவதும் ரூ.11,500 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்திற்கு ரூ.600 கோடி அளவிற்கு பயிர்க்கடன் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    இப்பயிர்க் கடன்கள் கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழில் குறிப்பிட்டவாறு பரப்பளவு பயிர் போன்றவற்றிற்கு ஏற்ப வழங்கப்படும். வட்டியில்லா பயிர்க்கடன் நபர் ஜாமீன் பெயரில் ரூ.1.60 லட்சம், அடமானத்தின் பேரில் ரூ.3 லட்சம் வரை வழங்கப்படுகின்றது.

    கறவை மாடு, கன்று வளர்ப்பு, செம்மறி ஆடு, வெள்ளாடு வளர்ப்பு மற்றும் அனைத்து விவசாய காரியங்களுக்கு மத்திய கடன்கள் வழங்கப்படுகின்றது.

    திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் தமிழக அரசால் வேளாண் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 183 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 46903 பயனாளிகளுக்கு ரூ.529.90 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

    இதில் திருப்பூர் மாவட்டம், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள 64 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 22371 நபர்களுக்கு ரூ.259.00 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

    இதில் காங்கயம் தொகுதிக்கு உட்பட்ட 24 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 7271 பயனாளிகளுக்கு ரூ.83.41 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×